நிரந்தர துணைஇயக்குனர்களை நியமிக்க வேண்டும்

Loading

 

நகர்ஊரமைப்பு இயக்குனருக்கு பெயிரா தலைவர் கடிதம்

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் ஆ.ஹென்றி தமிழகத்தில் மதுரை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகங்களில் நிரந்தர துணை இயக்குனர்களை விரைந்து நியமிக்க வேண்டி நகர் ஊரமைப்பு இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்.

 நகர் ஊரமைப்பு இயக்ககம் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் திட்டமிடல், நிலப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்துதல், மற்றும் நகரங்கள் சீராக வளர்வதை உறுதி செய்தல். இந்தத் துறையின் பணிகள் முதன்மைத் திட்டங்களைத் தயாரித்தல், கட்டிட அனுமதிகளை வழங்குதல் மற்றும் நிலத்தை குடியிருப்பு நிலமாக மாற்ற அனுமதித்தல் போன்ற முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறது.

 தமிழகத்தின் 38 மாவட்டங்களில் ஒவ்வொரு மாவட்டத்திலும் DTCP அலுவலகங்கள் துணை இயக்குனர் தலைமையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. DTCP துணை இயக்குனர் அவர்கள் திட்டமிடப்படாத பகுதிகளில் (non-plan areas) லேஅவுட்கள் (layouts) மற்றும் கட்டிடங்களுக்கான மேம்பாட்டு முன் அனுமதிகளை வழங்குதல்,மொழிவுகளைச் சரிபார்த்து, அனுமதி வழங்குதல், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பிற அரசுத் துறைகளுக்குத் திட்டமிடல் அனுமதி வழங்குதல் மற்றும் தொழில்நுட்ப உதவிகளை உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல், நிலப் பயன்பாட்டுத் தேவைகளுக்கேற்ப முதன்மைத் திட்டங்கள் மற்றும் விரிவான மேம்பாட்டுத் திட்டங்களில் தேவையான மாற்றங்கள் குறித்த முன்மொழிவுகளை ஆய்வு செய்து திட்டங்களில் மாற்றங்களைச் செயல்படுத்துதல், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனக் கட்டிடங்கள் அல்லது பெரிய அளவிலா அங்கீகரிக்கப்படாத லே-அவுட்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கான(regularisation)முன்மொழிவுகளை சரிபார்த்தல். மாவட்ட அலுவலகங்களில், துணை இயக்குநர் அந்தந்த உள்ளூர் திட்டமிடல் ஆணையம் (Local Planning Authority – LPA) அல்லது புதிய நகர மேம்பாட்டு ஆணையத்தின் (New Town Development Authority – NTDA) உறுப்பினர் செயலாளராகவும் (Member Secretary) செயல்படலாம் என்கின்ற வகையில் பொறுப்பு மிக்க மிக முக்கிய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

 கடந்த சில வருடங்களாக மதுரை, திருப்பத்தூர், மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்திற்கு மேற்குறிப்பிட்ட வகையில் மிக முக்கிய பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு வாய்ந்த துணை இயக்குனர் பதவிக்கு நிரந்தரமாக துணை இயக்குனர் நியமிக்கப்படாமல் செயல்பட்டு வரும் சூழலை கவனத்தில் கொண்டு மேற்கண்ட மாவட்டங்களில் செயல்படும் DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில் திண்டுக்கல்  மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக மதுரை மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் துணை இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார். அதுபோல் திருப்பத்தூர் மாவட்ட DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில் ராணிப்பேட்டை மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக திருப்பத்தூர் மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார்.

 மேலும் வேலூர் மாவட்ட DTCP அலுவலகத்தின் பணிகள் தடைபடாமல் நடைபெறும் வகையில் காஞ்சிபுரம் மாவட்ட துணை இயக்குனர் அவர்கள் கூடுதல் பொறுப்பாக வேலூர் மாவட்ட நகர் ஊரமைப்பு இயக்கக அலுவலகத்தின் துணை இயக்குனராகவும் செயலாற்றி வருகிறார் என்பதனை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறேன்.

 மேற்கண்ட வகையில் துணை இயக்குனர்கள் இரண்டு மாவட்டங்களின் பணிகளையும்  மேற்கொள்ள வேண்டியுள்ளதால் பணிச்சுமை மற்றும் உரிய நேரமின்மையின் காரணமாக பொதுமக்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினர் தொழில்நுட்ப அனுமதி வேண்டி இணையதளத்தில் விண்ணப்பித்த விண்ணப்பங்கள் ஒப்புதல் கிடைக்க பெறாமல் பெருமளவில் நிலுவையில் இருப்பதும் மற்றும் DTCP அலுவலகத்தில் பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சேவைகளையும் உரிய நேரத்தில் கிடைக்க பெறாமல் ஏராளமான கோப்புகள் தேங்கி கிடக்கும் சூழல் நிலவுவதால், மேற்கண்ட மாவட்டங்களில் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறை பணிகள் பெருமளவில் முடங்கி உள்ளதுடன், வீட்டு மனை பிரிவு மற்றும் கட்டுமானங்களில் முதலீடு செய்த பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினருக்கு கால விரயம் ஏற்படுவதுடன் பொருளாதார ரீதியாக பெரும் இழப்புகளுக்கு ஆளாகி அல்லல்படுகின்றனர்.

 ஆகவே பெரும் மதிப்பிற்குரிய நகர் ஊரமைப்பு இயக்குனர் அவர்கள் மேற்கண்ட பிரச்சனைகளை தங்களின் மேலான கவனத்தில் கொண்டு மதுரை, திருப்பத்தூர் மற்றும் வேலூர் மாவட்டங்களில் செயல்படும் DTCP அலுவலகங்களுக்கு நிரந்தர துணை இயக்குனர்களை விரைந்து நியமித்து பொதுமக்கள் மற்றும் கட்டுமானம் உள்ளிட்ட ரியல் எஸ்டேட் துறையினரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பெயிரா கூட்டமைப்பின் சார்பாக கோரிக்கை வைத்து ஆ.ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.

.

 

0Shares