நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள்

Loading

சம்பா நெற்பயிருக்கு காப்பீடு செய்ய நவம்பர் 15 கடைசி நாள் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் :
திருவள்ளூர் நவ 01 : வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் நெற்பயிர் சாகுபடி செய்த விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் திரு.மு.பிரதாப் அவர்கள் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் கூறியிருப்பதாவது :
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் அறிவிக்கை செய்யப்பட்ட 730 வருவாய் கிராமங்களிலும் நடப்பு சம்பா பருவத்தில் விவசாயிகள் நெற்பயிருக்கு  காப்பீடு செய்து, மகசூல் இழப்பிற்கு ஏற்றவாறு இழப்பீட்டு தொகை பெற முடியும். இதுவரை வடகிழக்கு பருவமழை 289.85 மி.மீ  திருவள்ளூர் மாவட்டத்தில்   பதிவாகி உள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் பருவ மழைபொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விவசாயிகள்  சாகுபடி செய்துள்ள நெல் பயிர்களில் ஏற்படும் மகசூல் இழப்பினை ஈடுசெய்யும் பொருட்டு,  நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் கம்பெனி ஆஃப் இந்தியா லிட் என்ற காப்பீட்டு நிறுவனத்தில் இணைந்து பயிர் காப்பீடு செய்ய நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாள் 15.11.2025 -க்குள் பயிர் காப்பீடு செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
எனவே, சம்பா பருவத்தில் சாகுபடி   மேற்கொள்ளும் விவசாயிகள் தொடக்க  வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலோ, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ (இ-சேவை மையங்கள்) நேரிடையாக,  நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் காப்பீடு  கட்டணமாக ஒரு ஏக்கருக்கு ரூ.545/- மட்டும் செலுத்தி காப்பீடு செய்துகொள்ளலாம்.
விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பம், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், கணினி சிட்டா வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றை இணைத்து காப்பீட்டு கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொது சேவை மையங்களில் (இ-சேவை மையங்கள்) / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்,தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
பதிவு செய்த விவரங்கள் அனைத்தும் சரியாக உள்ளதா என விவசாயிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும். மேலும்  விவரங்களுக்கு தங்களது பகுதியில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares