அரசு மருத்துவமனையில் நோய் தொற்றுவிழிப்புணர்வு
![]()
நீலகிரி மாவட்டம் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் தி சில்ட்ரன், பந்தலூர் அரசு மருத்துவமனை நிர்வாகம், மகாத்மா காந்தி பொது சேவை மையம், ஆகியன சார்பில் மழை வெயில் உள்ளிட்ட பருவகால நிலை மாற்றத்தால் ஏற்படும் நோய் தொற்றுக்கள் தவிர்க்கும் வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி பொது சேவை மைய தலைவர் நௌஸாத், ஆல் தி சில்ட்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பந்தலூர் அரசு மருத்துவமனை மருத்துவர் ஷாகுப்தா பேசும்போது
தற்போது பரவலாகமழை பெய்வதோடு வெயிலும் அடிக்கிறது. இதனால் பருவ நிலை மாற்றத்தால் காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் அதிகமாக பரவி வருகிறது. இது குறித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்க வேண்டும். இதனால் நீரில் உள்ள கிருமிகள் அழிந்து நமக்கு வரக்கூடிய மஞ்சள் காமாலை, வயிற்றுபோக்கு உள்ளிட்டவை ஏற்படாமல் தடுக்க முடியும். குளிர்காலம் ஆரம்பித்து உள்ளதால் வாதம் சம்பந்தமான நோய்கள் வரும் முறையான பரிசோதனைகள் மேற்கொண்டு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும். வீடுகள் அருகே தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்வதால் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க முடியும். இதனால் டெங்கு மலேரியா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க முடியும் என்றார்.
பந்தலூர் அரசு மருத்துவமனை காசநோய் பிரிவு மேற்பார்வையாளர் விஜயகுமார் பேசும்போது காசநோய் காற்றில் பரவி இருக்கும் டிரிபோகுளோசிஸ் என்ற கிருமி நுரையீரலில் தக்கி உருவாகும் தொற்றுநோய் ஆகும். தொடர் சளி காய்ச்சல் இருப்பின் சளி பரிசோதனை மேற்கொண்டால் காசநோய் தொற்று குறித்து அறிந்து கொள்ள முடியும். நோய் தாக்கம் இருப்பின் அரசு மருத்துவமனை மூலம் இலவச சிகிச்சை பெற்று கொள்ளலாம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் முழுமையாக குணப்படுத்த முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் மருத்துவமனை செவிலியர்கள், மருத்துவ பயனாளர்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

