ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சுமார் ரூ.1.43 கோடி மோசடி

Loading

ஆன்லைன் டிரேடிங் மூலம் பணம் சுமார் ரூ.1.43 கோடி மோசடி செய்த
வழக்கில் முன்னாள் வங்கி மேலாளர் உட்பட இருவர் கைது. மத்தியகுற்றப்பிரிவு நடவடிக்கை.

 

சென்னை, பெருங்குடியில் வசிக்கும் கார்த்திக்,வ/36, த/பெ.சிவலிங்கம் என்பவர்
பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் சமூக வலைதளத்தில் வந்த
ஆன்லைன் முதலீட்டு வர்த்தக விளம்பரத்தை பார்த்து அதை தொடர்பு கொண்டு வாட்ஸ் ஆப் குழு
ஒன்றில் இணைத்துள்ளார். அந்த குழுவில் மோசடி நபர்கள் அனுப்பிய லிங் மூலமாக முதலீட்டு
செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக லாபம் கிடைக்கும்
என்று சந்தேக நபர்கள் சொன்ன ஆசை வார்த்தைகளை நம்பி அவர்கள் சொன்னபடி பல்வேறு
வங்கி கணக்குகளுக்கு பல்வேறு தேதிகளில் சுமார் ரூ.1,43,06,211 -ஐ செலுத்தியுள்ளார். அவர்
செலுத்திய பணத்திற்க்கு ஏற்றவாறு அதிக லாபம் வந்தது போலவும், முதலீடு செய்யப்பட்டது
போலவும் மோசடி பேர்வழிகள் அந்த செயலியில் காண்பித்துள்ளனர். அதன்பின் முதலீடு செய்த
பணத்தை எடுக்க முனைந்தபோது அவர்கள் வெவ்வேறு காரணங்களை கூறி மேலும் பணம் கேட்டு
வற்புறுத்தவே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த கார்த்திக் சென்னை பெருநகர காவல்
ஆணையாளர் அலுவலகத்தில் 16.09.2025 அன்று கொடுத்த புகாரின் பேரில் சென்னை மத்திய
குற்றப்பிரிவு, சைபர் கிரைம் உதவி ஆணையாளர் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளரால்
புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்களின்
உத்தரவின்பேரில் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் திருமதி.A.இராதிகா,
இ.கா.ப அவர்களின் வழிகாட்டுதலில், சைபர் கிரைம் துணை ஆணையாளர் திரு.ஶ்ரீநாதா,
இ.கா.ப அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் மற்றும் காவல் ஆய்வாளர்
தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் தீவிர விசாரணை செய்தும், வங்கி கணக்கு விபரங்களை வைத்து
விசாரணை மேற்கொண்ட போது, சூர்யா ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தின் உரிமையாளர்
சூர்யா ஶ்ரீனிவாஸ் என்பவர் மேற்படி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது அதன் பேரில் எதிரி
1.சூர்யா ஶ்ரீனிவாஸ், வ/ 50, நுங்கம்பாக்கம் , சென்னை என்பவரை நுங்கம்பாக்கத்தில் வைத்து
கைது செய்து விசாரணை செய்த போது, அவருக்கு நன்கு அறிமுகமான ஈக்காட்டுதாங்கல்
பகுதியில் உள்ள கோடாக் மகேந்திர தனியார் வங்கிகிளையின் முன்னாள் மேலாளர் சேஷாத்ரி
எத்திராஜ் என்பவர் மேற்படி மோசடிக்கு மூளையாக செயல்பட்டு புகார்தாரரின் பணத்தை பல்வேறு
வங்கி கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்து மோசடி செய்ததாக கூறியதன் பேரில் முன்னாள்
வங்கி மேலாளர் 2.சேஷாத்ரி எத்திராஜ், வ/43, மேற்கு சைதாப்பேட்டை என்பவரை அவரது
வீட்டில் வைத்து நேற்று (23.10.2025) கைது செய்தனர். அவர்களிடமிருந்து குற்றசம்பவத்திற்கு
பயன்படுத்திய 3 செல்போன்கள் பறிமுதல்செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப்பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்படவுள்ளனர்.

சமீப காலமாக ஆன்லைன் முதலீட்டு மோசடி மற்றும் ஆன்லைன் பகுதி நேர வேலை
தொடர்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூகவலைதளங்களில் போலியான
விளம்பரங்கள் மூலம் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கும் ஆசை கட்டி பங்கு வர்த்தக
செயலிகள், விங்குகள், வலைதளங்கள் அனுப்பியும், பொய்யான டிமேட் கணக்குகளை துவக்கியும்
பல்வேறு வங்கி கணக்குகளில் பணத்தை பெற்று மோசடி பேர்வழிகள் பொதுமக்களை
ஏமாற்றுகின்றனர்.

பொதுமக்கள் இதுபோன்ற போலியான தொலைபேசி அழைப்புகள், அதிக லாபம் தரும்
முதலீட்டு விளம்பரங்கள், போலி முதலீட்டு செயலிகள், வலைத்தளங்கள் குறித்து பொதுமக்கள்
கவனமாக இருக்க வேண்டும் என்றும், தங்களின் வங்கி கணக்குகளை பிறரின் பயன்பாட்டிற்கு
விடக்கூடாது என்றும், போலியான ஆவணங்கள் கொடுத்து நடப்பு வங்கி கணக்குகள் (Current
Accounts) ஆரம்பித்து பயன்படுத்த வேண்டாம் என்றும், தெரியாத நபர்களின் கோரிக்கையை
ஏற்று வேறு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்ற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர
காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொது மக்கள் யாரேனும் இதுபோன்று இணையவழி குற்றத்தால் பாதிக்கப்பட்டது
தெரியவந்தால் உடனடியாக தேசிய இணையவழி குற்றத்தடுப்பு உதவி எண் 1930-க்கு
தொடர்புகொண்டு விவரங்களை தெரிவிக்க வேண்டும் அல்லது இணையவழி மூலமாக
https.www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்ய வேண்டும் என்று
அனைவரையும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0Shares