பதிவுத்துறைக்கு பொதுமக்களின் நலன் கருதி பெயிரா தலைவர் கடிதம்.

Loading

அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், எதிர்வரும் 24.10.2025 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தினை முன்னிட்டு கூடுதல் முன்பதிவு வில்லைகளை வழங்கிட ஆவண செய்யக் கோரி தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்களுக்கு பொதுமக்களின் நலன் கருதி கடிதம் எழுதியுள்ளார்.

மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில்..

எதிர்வரும் 24.10.2025 வெள்ளிக்கிழமை சுபமுகூர்த்த தினத்தினை முன்னிட்டு இந்நன்னாளில் பெரும்பாலான பொதுமக்கள் சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான ஆவணங்களை பதிவு செய்வதில் மிகுந்த ஆர்வமும் – மகிழ்ச்சியும் மற்றும் மனதிருப்தியும் அடைகின்றார்கள். ஆகவே சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவுகள் வழக்கத்தைவிட கூடுதலாக நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக சுபமுகூர்த்த நாட்களில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் ஆவண பதிவு செய்ய தேவையான அளவிற்கு முன்பதிவு டோக்கன்கள் வழங்குவதில் பற்றாக்குறை நிலவி வருவதை பெயிரா கூட்டமைப்பு கவனத்தில் கொண்டு பதிவுத்துறைக்கு தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை பரிசீலித்து வழக்கத்தை விட கூடுதலாக பதிவுத்துறை முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கி வருவதனை பெயிரா பாராட்டி வரவேற்றுள்ளது. இருப்பினும் சுபமுகூர்த்த தினங்களில் பொதுமக்கள் பெருமளவில் ஆவண பதிவுகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவதின் காரணமாக ஒரு சில பதிவு அலுவலகங்களில் கூடுதலாக வழங்கப்படும் டோக்கன்களும் போதுமானதாக இல்லை என பொதுமக்கள் மற்றும் ரியல் எஸ்டேட் துறையினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆகவே பொதுமக்களின் உணர்வுகளுக்கும், எண்ணங்களுக்கும் பதிவுத்துறை மதிப்பளித்து சுபமுகூர்த்த தினத்தன்று ஆவண பதிவுகளை அனைத்து மக்களும் மேற்கொள்ளும் வகையில் வழக்கத்தைவிட தேவையான அளவிற்கு கணிசமாக முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம். இவ்வாறு கணிசமான அளவில் முன்பதிவு டோக்கன்களை உயர்த்தி வழங்குவதன் மூலம் பதிவுத்துறைக்கு கூடுதல் வருவாய் கிடைப்பதுடன் பொதுமக்களின் விருப்பமும் நிறைவேறும்.

.ஆகவே பெருமதிப்பிற்குரிய தமிழ்நாடு பதிவுத்துறை தலைவர் அவர்கள் இதனை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் மேற்கண்ட சுபமுகூர்த்த தினங்களில் கூடுதலாக முன்பதிவு டோக்கன்களை கணிசமாக உயர்த்தி வழங்கிட பதிவுத்துறை தலைவர் அவர்கள் உரிய வழிவகை செய்ய வேண்டுமென அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறை தலைவருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.

0Shares