பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை

Loading

திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிர் பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அறிவுரை :

திருவள்ளூர் அக் 20 : தமிழ்நாட்டில், மாறிவரும் தட்பவெட்பநிலை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில், ஒரு சில இடங்களில் தண்டுத்துளைப்பான், புகையான் மற்றும் இலைச்சுருட்டுப்புழு தாக்குதல் தென்படுகிறது. தண்டுத்துளைப்பான் தாக்குதலில் இளம்பயிர் நடுக்குருத்து வாடிக்காய்ந்து விடும். நெல்மணிகள் பால் பிடிக்காமல் பதராகி வெண் கதிர்களாக காணப்படும்.  இலைச்சுருட்டுப்புழுக்கள் நெற்பயிரின் இலைகளை ஒன்றிணைத்து பச்சையத்தை சுரண்டி வெண்மையாக காணப்படும். புகையான் தாக்கிய பயிர்களில் காய்ந்து “பயிர் தீய்ந்தது” போன்ற அறிகுறிகள் தென்படும். மேலும், சில இடங்களில் நெல் வயல்களில் உவர் தன்மையினால் பாசி வளர்ச்சி தென்படுவதுடன் பயிர்கள் கருகிவிடும் நிலை ஏற்படுட்டுள்ளது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டுள்ள நெல்வயல்களில், தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள், வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுநர்கள், வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மை துணை இயக்குநர், வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மற்றும் வேளாண்மைத்துறை அலுவலர்களுடன் கூட்டாக வயல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் இதர இடங்களிலும் பொருளாதார சேதநிலை குறித்து வயலாய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், ஒருங்கிணைந்த முறையில் பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள பல்வேறு ஊடகங்கள் வாயிலாக விவசாயிகளுக்கு அறிவுரைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.எனவே, விவசாயிகள் தங்கள் நெல்வயல்களில் மேற்கண்ட அறிகுறிகள் காணப்பட்டால், வட்டார வேளாண் அலுவர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தண்டுத்துளைப்பான் தாக்குதலை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) கார்டாப் ஹைட்ரோ குளோரைடு 50% SP 400 கிராம் என்ற அளவிலும். புகையான் தாக்குதல்களை கட்டுப்படுத்திட ஏக்கருக்கு பைமெட்ரோசின் 50% WG 120 கிராம் குளோதையானிடின் 50% WG 8-9.6 கிராம், டினோடிபியூரான் 20% SG 60-80 கிராம் மற்றும் பிப்ரோனில் 5% SC 400 மில்லி என்ற அளவிலும், நெல் இலைச்சுருட்டுப்புழுவைக் கட்டுப்படுத்த ஏக்கருக்கு புளுபென்டியமைடு 20% WG 50 கிராம் (அல்லது) புளுபென்டியமைடு 20% W/W SC 20 மிலி  (அல்லது) கார்டாப்ஹைட்ரோகுளோரடு 50% SP 400 கிராம் (அல்லது) குளோரான்ட்ரனிலிபுரோல் 18.5% SC 60 மிலி என்ற அளவிலும், வயல்களில் பாசி படர்ந்திருந்தால் ஏக்கருக்கு ஒரு கிலோ காப்பர் சல்பேட்டினை 20 கிலோ மணலுடன் கலந்து தண்ணீர் பாயக்கூடிய 10 இடங்களில் பைகளில் கட்டி வைக்கவும், ஏக்கருக்கு 1 கிலோ 19:19:19 காம்ப்ளக்ஸ் உரத்தை இலை வழியாகத் தெளித்து பயிர் வளர்ச்சியை மேம்படுத்திடவும் விவசாயிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
மேலும், வயல் வரப்புகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பசுந்தாள் உரப்பயிர்கள் பயன்படுத்தவும், யூரியா, டிஏபி போன்ற உரங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவில் மட்டுமே பயன்படுத்தவும், நெல் சாகுபடியை தொடர்ச்சியாக மேற்கொள்வதை தவிர்த்து பயிர்சுழற்சி மேற்கொள்ள வேண்டும் என்று விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே, விவசாயிகள் தங்கள் வயல்களில் பூச்சி நோய் தாக்குதல் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து மேற்கண்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
0Shares