ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம்.. மகன்களை கொன்று தந்தை தற்கொலை!
ஆன்லைன் வர்த்தகத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் மனமுடைந்த தந்தை மகன்களை கொன்று தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்கற்குளம் கிராமத்தை சேர்ந்தவர் சிவபூபதி .இவருடைய மனைவி பார்வதி . இவர்களுக்கு 2 மகன்கள் இருந்தனர். சிவபூபதி தனது குடும்பத்துடன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் குறிஞ்சி நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பார்வதி கோபித்துக்கொண்டு தன்னுடைய தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இந்த நிலையில் வீட்டில் சிவபூபதி தூக்கில் பிணமாக தொங்கிய நிலையிலும், படுக்கையில் அவருடைய 2 மகன்களும் பிணமாக கிடந்தனர்.மேலும் சிவபூபதி தனது வயிற்று மற்றும் தோள்பட்டை பகுதியில் கடிதத்தை ஒட்டி இருந்தார். அதில் எனக்கு கடன் தொல்லை அதிகமாகி விட்டது. அதனால் இந்த உலகத்தைவிட்டு போகிறேன். என்னுடைய 2 மகன்களையும் அழைத்து செல்கிறேன் என்றும் எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் வெளியான பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன.
அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் ஆர்வம் கொண்ட இவர், பங்குசந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். அங்கு அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னைக்கு சென்ற சிவபூபதி அங்கும் ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டு நஷ்டத்தை சந்தித்துள்ளார்.இருப்பினும் தொடர்ந்து ஆன்லைன் வர்த்தகம் செய்தால் நஷ்டத்தை ஈடு செய்யலாம் என எண்ணி கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் ஓசூரில் குடியேறினார். ஆனாலும் அவருக்கு தொடர் நஷ்டம் ஏற்பட்டது.
இதில் வேதனை அடைந்த பார்வதி கணவர், குழந்தைகளை விட்டு விட்டு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் சிவபூபதி மிகவும் வேதனை அடைந்தார்.எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து தனது 2 மகன்களையும் கழுத்தை நெரித்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துள்ளதும் தெரியவந்தது.