கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை..மாவட்ட வருவாய் அலுவலர் வலியுறுத்தல்!
திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் திரு. இரா.இராம்பிரதீபன் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார்கள்.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தரும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை மனுக்களை வழங்கி வருகிறார்கள்.
அதன்படி நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் கல்வி உதவித்தொகை, வங்கிக்கடனுதவி, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் உபகரணங்கள், சாலை வசதிகள், பிரதான் மந்திரியின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், வேளாண்மைதுறை சார்ந்த பயிர்க்கடன்கள், புதியநீர் தேக்கதொட்டி அமைத்துதருதல், தாட்கோ மூலம்கடனுதவி, கூட்டுறவு சங்கங்களில் பயிர்கடன்கள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 780 மனுக்கள் பெறப்பட்டது. இக்கூட்டத்தில் பெண்கள், வயதானவர்கள், கைக்குழந்தை வைத்திருக்கும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெறுவதோடு, பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு தீர்வுகாண அனைத்து துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று செய்யார் சார் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 128 மனுக்களும், ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் 78 மனுக்களும் பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில் உதவி ஆட்சியர் (பயிற்சி) செல்வி. அம்ருதா எஸ். குமார்,இஆப மற்றும் அனைத்து துறைச்சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.