கலெக்டர், ஆர்டிஓ விடம் பெண் வாக்குவாதம்..மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பரபரப்பு!
விடையூர் கிராமத்தில் தந்தை பெயரில் உள்ள நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து உயிரிழந்த நபர், அண்ணன் பெயரில் கூட்டு பட்டா வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர், திமுக எம்எல்ஏ, டிஆர்ஓ, ஆர்டிஓ விடம் பெண் ஒருவர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு நிலவியது.
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவதும் இதில் பல்வேறு அடிப்படை வசதிகள் மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் மனுக்கள் கொடுப்பது வழக்கம். இந்நிலையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை வழங்கி வருகின்றனர். ஆனால் கொடுக்கப்படும் மனுக்கள் மீது மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ள நிலையில் கலெக்டர் மு.பிரதாப், திமுக எம்எல்ஏ.,வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மனுக்களை பெற்று வந்தனர்.
அப்போது, திருவள்ளூர் அடுத்த விடையூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் என்பவரின் மகள் அனிதா என்பவர் புகார் மனு அளிக்க வந்தார். அப்போது, தந்தை மீதிருந்த 30 சென்ட விவசாய நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து தந்தையின் அண்ணன் நாகரத்தினம் , மற்றும் பக்கத்து நில உரிமையாளர் ஏழுமலை என்பவரின் தந்தை குள்ளப்பரெட்டி ஆகியோர் மீது கூட்டு பட்டா வழங்கியதாக அவரது மகள் அனிதா புகார் அளித்தார். மேலும் தந்தை பெயரில் 30 ஆண்டுகளாக விவசாயம் செய்து வரும் 30 சென்ட் விவசாய நிலத்திற்கான பட்டாவை ரத்து செய்து வேறு நபர்களுக்கு கூட்டு பட்டா வழங்கியது குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 2024 ஏப்ரல் மாதம் விவசாயியின் மகள் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் ஒரு ஆண்டாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அலைக்கழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் ஏழுமலை என்பவரின் தந்தை குள்ளப்ப ரெட்டி என்பவர் உயிரிழந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் கடந்த ஆண்டு கூட்டுப்பட்டாவை அவர் பெயரில் பதிவு செய்திருப்பது குறித்து தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என கலெக்டர்,திமுக எம்எல்ஏ.விடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த ஆண்டு வருவாய் கோட்ட அலுவலராக இருந்த கற்பகம் என்பவர் இந்த கூட்டுப் பட்டா வழங்கியதை ரத்து செய்து தனது தந்தை பெயரில் பட்டா வழங்க வேண்டும் என தெரிவித்தார். ஆனால் பதில் சொல்லமுடியாமல் மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் மற்றும் எம்எல்ஏ., வி.ஜி.ராஜேந்திரன் செய்வதறியாது தவித்தனர்.
தொடர்ந்து விவசாயியின் மகளை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்த போலீசாரின் துணையுடன் முயற்சித்தனர். ஆனால் நியாயம் கிடைக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்ததால் ஒன்றரை வயது கைக்குழந்தையுடன் வந்த பெண்ணை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தியதால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பாக காணப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலர் விசாரித்து நடவடிக்கை எடுக்காமல், ஆயிரக் கணக்கில் வரும் மனுக்களை பார்க்கவே முடியவில்லை என்று தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும், தவறாக கூட்டு பட்டா வழங்கிய ஆர்டிஓ கற்பகம் மற்றும் விஏஓ ஆகியோர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக பெண் தெரிவித்தார். பணம் வாங்கிக் கொண்டு அதிகாரிகள் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் புகார் கொடுத்தால் பிரச்சினை தீரும் என்ற நிலை மாறி வாரம் தோறும் மனுக்களை கொடுப்பது மட்டும் நடக்கிறதே தவிர தீர்வு கிடைப்பதில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.