உங்களுடன் ஸ்டாலின் முகாம்.. மனுக்கள் மீது உடனடி தீர்வுகாணப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர்!
மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்
திரு. துரைமுருகன் அவர்கள் கொண்டகுப்பம் ஊராட்சியில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது உடனடி
தீர்வுகாணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்
மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர்
திரு. துரைமுருகன் அவர்கள் வாலாஜா ஊராட்சி ஒன்றியம்
கொண்டகுப்பம் ஊராட்சி துணை சுகாதார நிலையம் அருகில் நடைபெற்ற
உங்களுடன் ஸ்டாலின் முகாமினை பார்வையிட்டு மனுக்கள் மீது உடனடி தீர்வு
காணப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர்.ஜெ.யு.சந்திரகலா
இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை
அமைச்சர் அவர்கள் பேசியதாவது:-கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற அதிகளவிலான பெண்கள்
முகாம்களில் வருகை புரிகின்றனர். பெறப்படும் மனுக்களில் தகுதியான மனுக்கள்
தேர்ந்தெடுக்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மூலமாக அரசிற்கு அறிக்கை
சமர்ப்பிக்கப்படும். அப்பொழுது தகுதியான மகளிர்களுக்கு அரசின் மூலம் உரிமைத்
தொகை வழங்கிட ஒப்புதல் வழங்கப்படும்.
பட்டா இல்லாத மக்களுக்கு நிரந்தரமாக ஒரு இடம் கிடைத்தால் ஒரு வீடு கட்டி
சொந்த வீட்டிலே இருப்போம் என்கிற எண்ணம் இருக்கும். எவ்வளவுதான் மாட
மாளிகையில் தங்கினால் கூட நிம்மதி இருக்காது. நமக்கென சொந்த வீட்டில்
இருக்கின்றோம் என்று நிம்மதி இருக்கும். ஆகையினால் தான்
அப்படிப்பட்டவர்களுக்கெல்லாம் இன்றைக்கு பட்டா வழங்கி, வீடு கட்டித்தருகின்ற
திட்டத்தை செயல்படுத்தியிருக்கின்றோம்.
பொதுமக்கள் தங்கள் வசிக்கும் இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்குவதில்
எவ்வித பிரச்சனை இல்லை என்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களே பட்டா
கொடுத்து விடுவார். ஆனால் நீர்நிலை, மேய்க்கால் போன்ற இடங்களில் பிரச்சனை
இருந்தால், அதிகாரிகள் ஆய்வு செய்து பட்டா வழங்குவது குறித்து முடிவெடுப்பார்கள்.
இம்முகாமின் நோக்கம் என்னவெனில் அன்றைய பிரச்சனையை அன்றைக்கே தீர்த்து
வைக்க வேண்டும் என்பது தான்.
அதேபோன்று தாய் தந்தை இழந்து வறுமையில் வாழுகின்ற பிள்ளைகளுக்கு
அன்புக் கரங்கள் திட்டத்தின் கீழ் 18 வயது முடிவடையும் வரையில் மாதந்தோறும்
ரூ.2000 உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்தொகை
அக்குழந்தைகளுக்கு பெறும் உதவியாக இருக்கும்.
வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளுக்கு காலை உணவு
செய்து தர முடியாது. விடியற் காலையிலே வேலைக்கு செல்வார்கள். தங்கள்
பிள்ளைகளுக்கு உணவு செய்யவில்லை என்பதை எண்ணியே நாள் முழுவதும் கவலை
பட்டுக் கொண்டே இருப்பார்கள். இதனை தாயுள்ளத்தோடு அறிந்த நமது மாண்புமிகு
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை
செயல்படுத்தினார். இதனால் ஏராளமான குழந்தைகள் காலை உணவு சாப்பிட்டு
படித்து வருகின்றனர். நமது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24 மணி
நேரமும் மக்களைப்பற்றி சிந்தித்துக் கொண்டிருக்கிறார். எனவே தான் பொதுமக்களின்
அடிப்படை தேவைகள் உடனடியாக நிறைவேற்றி தரப்படுகிறது. இவற்றையெல்லாம்
செய்வதற்காக தான் இதுபோன்ற முகாம்களை செயல்படுத்தியுள்ளார். அதேபோன்று
கிராமப் பகுதிகளில் உள்ள ஏழை மக்கள் உடல் நல பிரச்சனைகள் குறித்து தெரியாமல்
நோய் பெரிதாகும் பொழுது, கண்டுபிடித்து சிகிச்சை பெறுகின்றனர். இதனை
களைய உங்கள் ஊரிலேயே நலன் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம்
நடத்தப்படுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
இத்திட்டமும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
காட்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள கிராமங்களில் தீபாவளி பண்டிகைக்கு
பின்னர் ஒவ்வொரு கிராமமாக சென்று அப்பகுதியில் உள்ள பிரச்சனை,
கோரிக்கைகள் கேட்டறிந்து அதனை களைய நடவடிக்கை எடுப்பேன் என மாண்புமிகு
நீர்வளம், சட்டமன்றம் மற்றும் சட்டத் துறை அமைச்சர் அவர்கள் பேசினார்கள்.
இம்முகாம்களில் வருவாய்த்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு பட்டா
மாறுதல் ஆணைகள், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் 2
கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள், மக்களைத் தேடி மருத்துவம்
திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு மருந்து பெட்டகங்கள், கால்நடை பராமரிப்புத்
துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு தாது உப்புக் கலவை, வேளாண்மைத்
துறையின் சார்பில் 1 பயனாளிக்கு உளுந்து விதை, 1 பயனாளிக்கு தார்பாய்
உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.செ.தனலிங்கம், திட்ட
இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை திருமதி.ந.செ.சரண்யாதேவி, ஒன்றியக் குழுத்
தலைவர் திரு.வெங்கட்ரமணன், துணைத் தலைவர் திரு.இராதாகிருஷ்ணன், வாலாஜா
ஊராட்சி மன்றத் தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் மற்றும் முகுந்தராயபுரம்
ஊராட்சி மன்ற தலைவர் திரு.முருகன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்
திரு.செல்வம், ஊராட்சி மன்றத் தலைவர் திரு.குமார் மற்றும் பலர் கலந்து
கொண்டனர்.