காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம்
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் நடைபெற்றது
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பத்திரிகை தகவல் அலுவலகம் சார்பில் ஊடகவியலாளர்களுக்கான பயிலரங்கம் காரைக்குடியிலுள்ள சிஎஸ்ஐஆர்- மத்திய மின்வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் இன்று (2025 அக்டோபர் 08) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநர் திரு வி பழனிசாமி, ஊடகவியலாளர்கள் சமூக பொருளாதார வளர்ச்சி தொடர்பான செய்திகளுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அத்துடன், டிஜிட்டல் யுகமான தற்காலத்திற்கு ஏற்ப தேவையான திறன்களை வளர்த்துக்கொள்வது மிகவும் அவசியம் என்று வலியுறுத்தினார்.
மேலும் போலிச் செய்திகளை தவிர்ப்பது இன்றைய காலகட்டத்தில் இன்றியமையாத பணி என்றும் திரு வி பழனிசாமி குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தேசிய திறந்தநிலை கல்வி நிறுவனத்தின் மண்டல இயக்குநர் திரு வி சந்தானம், பள்ளி கல்வி இடைநிற்றலை குறைக்கும் வகையில் தேசிய திறந்த நிலை கல்வி நிறுவனம் மூலம் 8,10 மற்றும் 12-ம் வகுப்புகளில் சேர்ந்து தேர்ச்சி பெறுவது குறித்தும், அதன் பிறகு கல்லூரிகளில் சேர்ந்து பட்டப்படிப்புகளை பயில்வது குறித்தும் விளக்கினார். இதற்காக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு தேர்வு மையங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ள தேர்வெழுதும் வசதிகள் குறித்தும் விரிவாக அவர் எடுத்துரைத்தார்.
பின்னர் பேசிய மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வரி ஆணையகத்தின் துணை ஆணையர் திருமதி. கே. ஷாலினி சுஷ்மிதா, அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள, ஜிஎஸ்டி 2.0 அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் குறித்து எடுத்துரைத்தார். பொதுமக்களுக்கு அன்றாட வீட்டு உபயோக பொருட்களின் விலை குறைவால் எந்தவகையில் பயனடைய முடியும் என்றும், அதன்மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு வித்திடும் என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.
சிஎஸ்ஐஆர்- மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி முனைவர். டி. ஜோனஸ் டேவிட்சன் பேசிய போது, அந்நிறுவனத்தின் ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை பட்டியலிட்டதுடன், தற்போது அந்நிறுவனம் மேற்கொண்டுவரும் ஆராய்ச்சிகளை விளக்கினார். அத்துடன் எவ்வாறு நமக்கு அன்றாட வாழ்வில் உதவும் என்றும் எடுத்துரைத்தார். 17 அம்ச நீடித்த வளர்ச்சி இலக்குகள் குறித்தும் அவற்றில் குறிப்பிட்ட சில இலக்குகளுக்கு மத்திய மின் வேதியியல் எவ்வாறு பங்களிக்கிறது என்றும் விரிவாக எடுத்துரைத்தார். விவசாயம், மருந்துத் துறை, திறன் மேம்பாடு போன்றவற்றில் மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பங்கையும் அவர் எடுத்துரைத்தார்.
சிவகங்கை மாவட்ட முன்னோடி வங்கி (இந்தியன் ஓவர்சீஸ் வங்கி) மேலாளர் திரு. எஸ். பிரவீன் குமார் அவர்கள், நிதிசார் உள்ளடக்க விழிப்புணர்வு முகாம் குறித்து விளக்கினார். முகாமில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 445 கிராமங்களிலும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் கேஒய்சி (உங்கள் வாடிக்கையாளரை அறிந்துகொள்ளுங்கள்) புதுப்பித்தல் மற்றும் பிரதமரின் ஜன் தன் வங்கித் திட்டம், ஜீவன் ஜோதி பீமா ஆயுள் காப்பீட்டு திட்டம், சுரக்ஷா பீமா விபத்துக் காப்பீட்டுத் திட்டம், அடல் ஓய்வூதியத் திட்டம் போன்ற நிதிசார் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் பயனளிக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று உறுதியளித்தார்.
நிகழ்ச்சியில், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் ஊடக தொடர்பு அலுவலர் திரு. அ அழகுதுரை, மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பர உதவி அலுவலர் திரு போஸ்வெல் ஆசிர், அழகப்பா பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை தலைவர் முனைவர் ஜான்சன், மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகள் மற்றும் சுமார் 80 பத்திரிகையாளர்கள், இதழியல் மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.