நாற்றுகள் வளர்த்தல் பணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :

Loading

காட்டுப்பள்ளி ஊராட்சியில் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் 50 ஆயிரம் அலையாத்தி நாற்றுகள் வளர்த்தல் பணி : மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் அக் 05 : இயற்கையை பாதுகாக்கவும் சுற்றுச் சூழலை சமநிலையில் வைத்திருக்கவும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் மரக்கன்றுகள் வளர்க்கும், “நாற்றாங்கால் பண்ணைகள்” ஊரக வளர்ச்சித்துறை மூலமும், பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் வனத்துறை ஒருங்கிணைந்து “நாற்றாங்கால்” பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் 2025-26 ஆம் ஆண்டில், 14 வட்டாரங்களில் உள்ள 23 நாற்றாங்கால் பண்ணைகளில் 5.36 இலட்சம் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக 2.80 இலட்சம் மரக்கன்றுகள் நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டு அவற்றினை வளர்ப்பதற்கான ஆரம்ப கட்டப்பணிகளுக்கு “தாய் பாத்தி” அமைத்தல், விதைகளை தாய் பாத்திகளில் இடுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் வனத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை ஒருங்கிணைந்து மகாத்மா காந்தி  தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2025-26 ஆண்டுகளில் 12 நாற்றாங்கால் பண்ணைகளில் 95 ஆயிரம் எண்ணிக்கையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. மேலும், கூடுதலாக 1,38,000 எண்ணிக்கை மரக்கன்றுகள் வளர்ப்பதற்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் கடற்கரை சூழலை காக்கும் விதமாக மீஞ்சூர் வட்டாரம் – கும்மிடிப்பூண்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சியில் 50 ஆயிரம் அலையாத்தி நாற்றாங்கால் மூலம் அலையாத்தி கன்றுகளை வளர்க்கும் பணியை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட  இயக்குநரும் இணை இயக்குநருமான வை.ஜெயகுமார், மாவட்ட வன அலுவலர் சுப்பையா, செயற்பொறியாளர் இராஜவேல், உதவி செயற்பொறியாளர் கஜலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரவி,குணசேகரன், வனத்துறையினர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
0Shares