கரூர் கூட்ட நெரிசல்… மந்திரி நிர்மலா சீதாராமன் நேரில் ஆய்வு!
மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டபோது கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 50-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த கூட்ட நெரிசல் சம்பவத்தில் 40 பேர் உயிரிழந்து உள்ளனர்.
கரூரில் நிகழ்ந்த இந்த துயர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவே கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாயும் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மத்திய நிதி மந்திரியும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா சீதாராமன் இன்று கரூர் சென்றுள்ளார். அவர் வேலாயுதம்பாளையத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவர்களை நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார் .