விஜய் பிரசார கூட்டத்தில் 10 பேர் உயிரிழந்த சோகம்..; அமைச்சர்கள் உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் உத்தரவு!

Loading

விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்றிரவு கரூர் மாவட்டத்தில் மக்களை சந்தித்து உரையாற்றினார். அப்போது விஜய் வேன் அருகே கட்டுக்கடங்காத கூட்டம் கூடியநிலையில் விஜய் பேசிக் கொண்டிருக்கும்போதே, பெண் ஒருவர் மயக்கம் அடைந்தார். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதனை தொடர்ந்து விஜய் பேசி முடித்து புறப்பட்ட பின்னர், கூட்டம் கலைந்து செல்லும்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டதில் 30-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில் சுமார் 10 பேர் உயிரிழந்ததாக அச்சமான செய்தி வெளியாகியுள்ளது. மேலும், பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், விஜய் பிரசார கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்ட நிலையில், அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் ஆகியோரை உடனடியாக செல்ல முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.இதுபற்றி மாவட்ட கலெக்டரை, முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்பு கொண்டு பேசினார். உடனடியாக தேவையான உதவிகளை செய்யும்படி உத்தரவிட்டு உள்ளார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார். சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. டேவிட் ஆசீர்வாதம் சம்பவ பகுதிக்கு செல்லவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

0Shares