எடப்பாடி செல்வப்பெருந்தகை மோதல்..பரபரக்கும் அரசியல் களம்!
மக்கள் பிரதிநிதியை பிச்சைக்காரன் என்பதா? என எடப்பாடிக்கு செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியை ‘பிச்சைக்காரன்’ என்று இழிவுபடுத்துவது, கோடிக்கணக்கான ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் மதிப்பையும் வாழ்க்கையையும் இழிவுபடுத்தும் செயலாகும். இத்தகைய விஷம கருத்து, மக்களின் நம்பிக்கையை நாடுவது பிச்சை கேட்பது அல்ல, அது ஜனநாயகத்தின் அடித்தளம்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகிய தலைவர்களின் பாதையில் பயணித்து, விளிம்புநிலை மக்களின் வாக்குகளால் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், முதல்வராகவும் ஆனீர்கள். ஆனால், இன்று மக்களின் வலிகளைபார்க்க முடியாத அளவுக்கு நீங்கள் தூரத்தில் நிற்கிறீர்கள்.
டெல்லியில் முகத்தை மறைத்துக் கொண்டு, வேறொருவரின் சொகுசு பென்ட்லி காரில்பயணிக்கிறீர்கள். உங்களுக்கு எப்படி இந்த நாட்டின் ஏழைகள் எதிர்கொள்கின்ற துயரங்களும் நெருக்கடிகளும் தெரியும், புரியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் என்னை ‘பிச்சைக்காரன் – ஒட்டு போட்ட சட்டை’ என்று அழைக்கும் போது, கோடிக்கணக்கான தமிழர்களின் மரியாதையையும் மதிப்பையும் இழிவுபடுத்துகிறீர்கள்.
விளிம்புநிலையில் உள்ள மக்களால் அளிக்கப்படும் வாக்குகளே என் குரலாகவும், அவர்கள் சுயமரியாதைக்கும், அன்றாட வாழ்வுப் போராட்டத்திற்கும் நான் கடமைப்பட்டவன். அந்த மரியாதையும் அந்தப் போராட்டமும், எவரின் அவமதிப்புக்கும் உரியவை அல்ல.எடப்பாடி பழனிசாமியின் ஜனநாயக விரோதக் கருத்தை ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் ஆதரிக்கிறீர்களா.?”
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.