பாலியல் தொந்தரவு: மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!
![]()
பாலியல் தொந்தரவு செய்ததால் திருச்சி அண்ணா பல்கலைக்கழக மாணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்த மாரீஸ்வரன் திருச்சி அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வந்தார்.இவர் தினமும் புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூரில் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் முகநூல் மூலம் திருச்சி் அரியமங்கலத்தை சோ்ந்த பாலிடெக்னிக் மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதையடுத்து அவரை மாரீஸ்வரன் அடிக்கடி சென்று சந்தித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மாரீஸ்வரன் மண்டையூர் அருகே ரெயில்வே தண்டவாளத்தில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி ரெயில்வே போலீசார் மாரீஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் மாரீஸ்வரன் தங்கியிருந்த அறையில் போலீசார் சோதனை நடத்தியதில் அவர் ஒரு நோட்டில் எழுதி வைத்திருந்த உருக்கமான கடிதம் சிக்கியது.
அதில் அரியமங்கலத்தை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து தன்னிடம் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து, அதனை வீடியோ, எடுத்து மிரட்டியதாகவும், பணத்தை பெற்றதோடு, அணிந்திருந்த தங்கச்சங்கிலியையும் பறித்ததாக குறிப்பிட்டு, மனவேதனையில் தற்கொலை செய்வதாக எழுதியிருந்தாக போலீசார் தெரிவித்தனர்.
இதில் சம்பந்தப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் இளங்கோவன் (20), அவரது நண்பர்களான பாண்டீஸ்வரன் , பவித்ரன் (20), முத்துராஜா (21), ஆண்டனி சஞ்சய் (22) ஆகிய 5 பேரையும் திருச்சி ரெயில்வே போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

