வெள்ள பாதிப்பு.. ரூ.1,600 கோடி நிவாரணம்..பிரதமர் மோடி அறிவிப்பு!
பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் வழங்கப்படும் ,உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், இமாசல பிரதேசம், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த பல வாரங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இடைவிடாது கொட்டி வரும் கனமழையால் உயிரிழப்புகளும், பொருட்சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் மீட்கப்பட்டு, பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மாநில அரசுக்கு உதவியாக, ராணுவத்தினரும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, வெள்ள நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் பஞ்சாப் அரசின் தலைமை செயலாளர் கே.ஏ.பி.சின்ஹா விளக்கினார். அதைத் தொடர்ந்து, மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மோடி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். கடினமான காலங்களில் மக்களுக்கு அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் அவர்களிடம் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
வெள்ள பாதிப்பு காரணமாக பஞ்சாப்பில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், 1.91 ஹெக்டேர் அளவிலான விவசய நிலங்கள் நீரில் மூழ்கி நாசமாகியுள்ளன.
வெள்ள நிவாரண பணிகளுக்காக மத்திய அரசு ரூ.20,000 கோடி நிதி வழங்க வேண்டும் என பஞ்சாப் அரசு கோரிக்கை விடுத்தது. இந்த நிலையில், வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட பிரதமர் மோடி, பஞ்சாப் மாநிலத்திற்கு ரூ.1,600 கோடி நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், வெள்ள பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.