ஏற்றுமதி துறைகளை பாதுகாக்க மத்திய அரசுக்கு ஸ்டாலின் வேண்டுகோள்!
அமெரிக்கா விதித்த 50% சுங்கவரி காரணமாக இந்தியாவின் ஏற்றுமதி துறைகள் பாதிக்கப்படுவதாகவும், குறிப்பாக தமிழ்நாட்டின் துணிநூல், இயந்திரம், வைரம், வாகன உதிரி பாகங்கள் துறைகள் கடும் நெருக்கடியில் உள்ளதாகவும், மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்க வரிவிதிப்பால் தமிழ்நாடு சுமார் 3.93 பில்லியன் டாலர் இழப்பு சந்திக்க நேரிடும் என Guidance Tamil Nadu பகுப்பாய்வு கூறியுள்ளது. திருப்பூர் போன்ற பகுதிகளில் பெண்கள் அதிகம் பணிபுரியும் துணிநூல் துறையிலேயே 1.62 பில்லியன் டாலர் இழப்பு மற்றும் பெருமளவு வேலை இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பதாகவும், அதில் GST சீர்திருத்தம், அவசர கடனுதவி, ஏற்றுமதி ஊக்கத்திட்டங்கள், சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்கள் (FTA) ஆகியவற்றை விரைவாக முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
தமிழ்நாடு தனியாக துணிநூல் உற்பத்தி, சாயம்-அச்சிடும் அலகுகள், தொழில்நுட்ப துணிநூல் மிஷன் போன்ற திட்டங்களை முன்னெடுத்துள்ளதாகவும், ஆனால் சர்வதேச பேச்சுவார்த்தை, சுங்க கொள்கை, மாபெரும் நிதி ஆதரவு போன்ற துறைகளில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட வேண்டும் என வலியுறுத்தினார்.
“ஒரு மாநிலத்தால் மட்டுமே இந்த நெருக்கடியை சமாளிக்க முடியாது; மத்திய அரசு உடனடியாக புதிய கொள்கைகளை கொண்டு வந்து ஏற்றுமதி துறையைப் பாதுகாக்க வேண்டும்” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.