இன்னும் ஆறு மாதத்தில் முடித்து தரவேண்டும்..அதிகாரிகளுக்கு உத்தரவு போட்ட மாவட்ட ஆட்சியர்!
464 வீடுகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளன என மாவட்ட ஆட்சியரிடம் அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
ஸ்மார்ட் சிட்டி திட்ட நிதி உதவியுடன் பொதுப்பணித் துறையால் லாம்பேர்ட் சரவணன் நகரில் 128 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பும் மேலும் ஸ்மார்ட் சிட்டி துறை மூலம் துப்ராயப்பேட்டை பகுதியில் 60 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அப்பகுதிகளுக்கு சென்று நடைபெறும் பணிகளை பார்வையிட்டார்கள். அப்பொழுது பொதுப்பணித்துறை அதிகாரிகள் இரண்டு மாதத்தில் இப்பணிகள் முடிக்கப்படும் என தெரிவித்த நிலையில் பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும்படி கேட்டுக் கொண்டார்கள்.
மேலும் அப்பகுதியில் நடைபெறும் சாலை பணிகளை பார்வையிட்டு சாலைப் பணிகள் தரமாக நடைபெற வேண்டுமென அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்கள். மேலும் லாம்பேர்டு சரவணன் நகரில் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 896 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பை பார்வையிட்டார்கள் .
அப்பொழுது குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் 464 வீடுகள் இன்னும் ஆறு மாதத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளன என மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தார்கள். இப்பணிகளையும் விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கும்படி பொதுப்பணித்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்கள்.