தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை தேவை..சீரும் MLA !
விடுமுறை நாட்கள் மற்றும் சிறப்பு வகுப்புமள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் நேரு கோரிக்கைவிடுத்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகள், கல்வித்துறையின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு நடக்காததால் அதன்எதிரொலியாக மாணவர்களும், பெற்றோர்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். குறிப்பாக ஒரு சில தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்த வகுப்பு நேரத்தை கடந்து இரவு 9 மணிவரையிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்கள். அதேபோல் வார விடுமுறை நாட்களிலும் மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து பாடம் நடத்துகிறார்கள்.
இதில் 9ம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியர்களின் நிலைமை மிகவும் கொடுமையாக உள்ளது. விடுமுறை நாட்களில் இவர்களுக்கு special class இருக்கிறது என்று கூறி காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பாடம் நடத்துகிறார்கள். மேலும் கனமழை மற்றும் வெயில் தாக்கத்தால் அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களில் கூட மேற்கண்ட மாணவர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பள்ளிக்கு வர வைத்து பாடம் நடத்தும் அவலநிலை நடந்தேறி வருகிறது. அதேநேரத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் ஈடுபடமுடியாததால் ஒருவித மனஅழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதனால் பெற்றோர்களும் கவலைக்கு உள்ளாகிறார்கள்.
இதை எந்த பெற்றோராவது எதிர்த்து கேள்விகேட்டாலும் அல்லது அவர்களின் பிள்ளைகளை விடுமுறை நாட்களில் பள்ளிக்கு அனுப்பாமல்விட்டால் சம்பந்தப்பட்ட மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் சில தனியார் பள்ளிகள் கடுமையாக நடந்து கொள்வதாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் இப்படிப்பட்ட தனியார் பள்ளிகள் அரசு விடுமுறை நாட்களில் மாணவர்களை பள்ளிக்கு வரவைத்து பாடம் நடத்துவதால் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களுக்கு விடுமுறை கிடைக்காமல் அடிமைகள் போல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள். இதனால் அந்த ஆசிரியர்களின் அவரவர் குடும்பத்தில் உள்ள படிக்கும் பிள்ளைகளையும், வயதான பெற்றோர்களையும் கவனிக்க முடியாமல் பணி சுமைகளால் அவதிக்குள்ளாகிறார்கள்.
ஆகையால் மேற்கண்ட நிலைமைகளை கருத்தில் கொண்டு அரசு நிர்ணயித்த வகுப்பு நேரத்தை கடந்து மாணவர்களுக்கு பாடம் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து மாணவர்களின் நலனில் அக்கறை செலுத்தி அவர்களின் எதிர்காலத்தை பாதுகாத்து உதவுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி.
இது சம்பந்தமாக மாண்புமிகு கல்வித் துறை அமைச்சர் அவர்களுக்கும், உயர்திரு கல்வித்துறை செயலர் அவர்களுக்கும், உயர்திரு மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும், உயர்திரு கல்வித் துறை இயக்குனர் அவர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று சட்டமன்ற உறுப்பினர் நேரு கோரிக்கைவிடுத்துள்ளார்.