சமபந்தி விருந்து.. மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி!

Loading

சேலம், புனித பால் மேல்நிலைப் பள்ளியின் 60-ஆம் ஆண்டு வைரவிழாவை முன்னிட்டு நடைபெற்ற சமபந்தி விருந்தில் மாணவர்களுடன் அமர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி மதிய உணவு அருந்தினார் .

சேலம், மரவனேரியில் உள்ள புனிதபால் மேல்நிலைப்பள்ளியின் 60-ஆம் ஆண்டு வைரவிழா நடைபெற்றது. இவ்விழாவில், சேலம் மறை மாவட்ட ஆயர். அருள்செல்வம் ராயப்பன் பங்கேற்று சிறப்பு திருப்பலி நடத்தினார். அதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் அலெக்ஸ் பிரபு வரவேற்புரை ஆற்றினார், பள்ளித்தாளாளர் அந்தோணி மரியா ஜோசப், சேலம் மறை மாவட்டம் முதன்மை குரு மைக்கேல்ராஜ் செல்வம், மறை மாவட்ட ஆர்சி பள்ளியின் மேலாளர் கிரிராஜன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கபீர், மாவட்ட கல்வி அலுவலர் நரசிம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர்.பிருந்தா தேவி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில் புனித பால் மேல்நிலைப் பள்ளியில், கல்வியைத் தாண்டி மாணவர்களுக்கு விளையாட்டுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இப்பள்ளியில் படித்த மாணவர்கள் தற்போது பல்வேறு அரசு உயர் பதவிகளிலும், சர்வதேச விளையாட்டு வீரர்களாகவும் விளங்கி வருகின்றனர். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தி கடினமாக உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்று கூறினார்.

அதன் பின்னர் பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கான சமபந்தி விருந்து நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர். பிருந்தா தேவி அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்தினார். பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட கைப்பந்து கழக செயலாளர். சண்முகவேல் மற்றும் முன்னாள் ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், நன்கொடையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஐசக் அவர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி கூறினார்.

 

 

0Shares