உத்தரகாண்ட் மேகவெடிப்பு: வெள்ளத்தில் சிக்கிய 130 பேர் மிட்பு – புஷ்கர் சிங் தாமி தகவல்
உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தின் ஹர்சில் அருகே உள்ள தாராலி பகுதியில் நேற்று திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை பெய்தது. இந்த மேகவெடிப்பினை தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் அங்குள்ள கட்டிடங்கள் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், மண்ணில் பலர் புதையுண்டதாகவும் அஞ்சப்படுகிறது. உள்ளூர் காவல்துறை, எஸ்.டி.ஆர்.எப், ராணுவம் மற்றும் தீயணைப்புப் படைகளின் மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேகவெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமியை தொடர்பு கொண்டு, அங்குள்ள நிலை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். மேலும் மத்திய அரசு சார்பில் மீட்புப் பணிகளுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையில், டேராடூனில் உள்ள அவசரகால கட்டுப்பாட்டு அறைக்கு சென்ற புஷ்கர் சிங் தாமி, அங்கு நடைபெறும் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை ஆய்வு செய்தார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து இதுவரை 130-க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொடர்பு மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.