நலவாரியம் மூலம் ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு: ஆட்டோ ஓட்டுனர்கள் மாநாட்டில் தீர்மானம்!
வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், மானிய வீட்டு கடன் வசதியும் செய்து தர வேண்டும் என்று தூத்துக்குடியில் நடைபெற்ற ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுனர் சங்கம் மாவட்ட மாநாடு சிஐடியு மாவட்டக்குழு அலுவலகத்தில் மாவட்ட பொருளாளர் தளவாய்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
அப்போது கூட்டத்தில் ஆட்டோ ஓட்டுனர்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து தொழிலாளர்கள் கருத்துக்களை தெரிவித்தனர். புதிய நிர்வாகிகள் தேர்வுக்கு பின் சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து மாநாட்டை நிறைவு செய்து பேசினார்.
மாநாட்டில் நீண்ட காலமாக இயங்கி வரும் ஆட்டோ ஸ்டாண்டுகளை தொழிலாளர்கள் ஏற்கும் வகையில் மாற்று இடம் வழங்காமல் அகற்றக் கூடாது. ஆட்டோ கட்டணங்களை தமிழக அரசு மறு நிர்ணயம் செய்ய வேண்டும்.
ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்க வேண்டும். நலவாரிய ஓய்வூதியத்தை ரூ.3,000 ஆகவும், இதர பணப்பலன்களையும் உயர்த்தி வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு ரூ.20 லட்சம் விபத்து காப்பீடு நலவாரியத்தின் மூலம் வழங்க வேண்டும். புதிய ஆட்டோ வாங்கும் தொழிலாளர்களுக்கு 50 சதம் மானியத்துடன் கடன் வழங்க வேண்டும். வீடு இல்லாத ஆட்டோ தொழிலாளர்களுக்கு இலவச மனைப்பட்டாவும், மானிய வீட்டு கடன் வசதியும் செய்து தர வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.