ஓராண்டாக அடிப்படை வசதிகளை செய்துதரவில்லை .. ராணிப்பேட்டை நாதீஸ்வரர் கோயில் ஸ்தாபகர் புகார்!
பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமாதேவி உடனுறை அனந்த நாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ள பகுதிகளில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள், கோவில் நிர்வாகி குற்றம்சாட்டியுள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா வட்டம் அனந்தலை ஊராட்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ உமாதேவி உடனுறை அனந்த நாதீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது .இந்தக் கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களும், சிவனடியார்களும் வந்து செல்வது வழக்கம். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 153 வது வாரமாக சனிக்கிழமை தோரும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
இந்த முற்றோதல் நிகழ்ச்சிக்கு சுமார் 500க்கும் மேற்பட்ட பக்தர்களும், சிவனடியார்களும் வந்த வண்ணம் உள்ளனர். அதனைத் தொடர்ந்து மாதத்தில் இரண்டு பிரதோஷ பூஜைகள், கிருத்திகை, அமாவாசை, சஷ்டி, சதுர்த்தி போன்ற அனைத்து பூஜைகளும் நடைபெற்று வருகிறது.
இந்த பிரசித்தி பெற்ற கோயில் பல்லாயிரம் ஆண்டுகளாக முன்னோர்களால் வழிபட்ட இந்த திருத்தளத்தில் தற்போது புறனமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து வரும் தை மாதம் மகா கும்பாபிஷேகம் செய்ய ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்திருக்கும் நிலையில் போதிய சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கடந்த ஓராண்டாக ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோயில் ஸ்தாபகர் ரவி தெரிவிக்கிறார்.
ஆகையால் இந்த பிரசித்தி பெற்ற கோயில் மேலும் வளர்ச்சி அடைய அடிப்படை வசதிகளை ஊராட்சி மன்ற தலைவரும், மாவட்ட ஆட்சியரும், சட்டமன்ற உறுப்பினரும் மற்றும் அமைச்சரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் ஸ்தாபகர் ரவி மற்றும் ஊர் பொதுமக்கள் கோரிக்கையாக வைத்துள்ளனர்.