பேருந்தில் இளம் பெண்ணிடம் சில்மிஷம்.. சித்த மருத்துவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!
திருவள்ளூரில் அரசு பேருந்தில் இளம் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சித்த மருத்துவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
திருவள்ளூர் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீ பெரும்புதூர் வரை செல்லும் 538 ஏ மாநகரப் பேருந்தில் ஆண் பெண் என பல பயணிகள் ஏறியுள்ளனர். அதேபோல் திருவள்ளூர் அடுத்த பட்டறை கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண்ணும் ஏறி இருக்கையில் அமர்ந்துள்ளார். பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு அரை கிலோமீட்டர் தூரத்தில் உள்ள காமராஜர் சிலை அருகே வந்து கொண்டிருந்தபோது அந்த பேருந்தில் பயணம் செய்த நபர் அந்தப் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் கூச்சலிட்டதால் சக பயணிகள் திரும்பிப் பார்க்கும்போது அந்தப் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை பார்த்துள்ளனர். இதனால் பேருந்தில் இரு வழிகளிலும் கதவை அடைத்து விட்டு சக பயணிகள் சரமாரியாக தாக்கி திருவள்ளூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து மேற்கொண்ட விசாரணையில் ண சில்மிஷத்தில் ஈடுபட்ட அந்த நபர் மது போதையில் இருப்பதும், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த மதி என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர் அரக்கோணத்தில் சித்த மருத்துவராக பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
இதனையடுத்து திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மது போதையில், சித்த மருத்துவதாக இருந்த நபர் ஒருவர் இளம் பெண்ணிடம் ஒழுங்கீனமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் திருவள்ளூரில் இருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் வந்து நிறுத்தப்பட்ட அந்த பேருந்து ஒரு மணி நேரம் கழித்து புறப்பட்டு சென்றது.