அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்!

Loading

ஓசூர் அருகே உள்ள தேன்கனிக்கோட்டை, பெண்ணாங்கூர் கிராமத்தில் அரளிக்காய்களை சாப்பிட்ட 4 குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில் சிறுவர்களின் பெற்றோர் அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள பெண்ணாங்கூர் கிராமத்தை சேர்ந்த சிறுவர் சிறுமிகள் ஒன்றாக அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் இருந்த அரளிக்காய் மரத்தில் காய்த்து தொங்கிய அரளி காய்களை சாப்பிடும் பழங்கள் என நினைத்து சிறுவர்கள் பறித்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அரளிக்காய்களை சாப்பிட்டதில் அந்த கிராமத்தை சேர்ந்த அப்துல் ஹஷித் என்பவரது மகன் அப்துல் ஹனன் (09) ஆசிப் ஷேக் என்பவரது மகன் ஆயரா ஷேக் (08) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பைஷர் என்பவரது மகன் முகமது சையான் ஷேக் (08) மற்றும் மகள் சுனேரா (07) ஆகிய 4 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அறிந்த சிறுவர் சிறுமிகளின் பெற்றோர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவரையும் மீட்டு அங்கிருந்து தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுசிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் சிறுவர் சிறுமிகளுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அனைவரையும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது. இது குறித்து தேன்கனிக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

0Shares