குடிநீர் தட்டுப்பாடு..அரசு பேருந்தை சிறைபிடித்து கிராம பெண்கள்!
திருத்தணி அருகே குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படுவதை கண்டித்து அரசு பேருந்து சிறைபிடித்து கிராம பெண்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி அருகே பெரிய கடம்பூர் கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொடடிகளில் குடிநீர் நிரப்பி வைத்து குழாய்களில் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. கோடை வெயில் தீவிரமடைந்துள்ள நிலையில் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், கடந்த 10 நாட்களாக பெரிய கடம்பூர் கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது.
ஊராட்சி அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் முறையாக நடவடிக்கை எடுக்கப்படாமல் அலட்சியமாக செயல்படுவதாக கூறி கிராம பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் அன்வர்திகான்பேட்டை இருந்து திருத்தணிக்கு செல்லும் அரசு பேருந்து தடம் எண்.83 ஏ பேருந்தை சிறை படித்து காலி குடங்களுடன் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பேருந்து சேவை அரை மணி நேரம் தடைபட்டது. அரசு பேருந்தில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்வர் அதிக அளவில் இருந்ததால் பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் கிராம மக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர் .
இதனை எடுத்து அரை மணி நேரம் காலதாமதமாக அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.அதிகாரிகள் உடனடியாக குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை எடுக்க விட்டால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். குடிநீர் கேட்டு கிராம பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.