அக்னி வீரர்களாக சேர விண்ணப்பிக்கலாம் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல்!

Loading

இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களாக சேர இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய இராணுவத்தில் அக்னி வீரர்களாக ஆள் சேர்ப்பதற்கு www.joinindianarmy.nic.in இணைய முகவரி மூலம் விண்ணப்பம் செய்ய அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்கள் உட்பட 11 மாவட்டங்களிலிருந்து விண்ணப்பங்கள் அக்னி வீர் பொதுப்பணி, அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னி வீர் அலுவலக உதவியாளர்/சரக்கு அறைக்காவலர், அக்னி வீரன் Tradesman 10 ம் வகுப்பு தேர்ச்சி, அக்னி வீர் Tradesman 8 ம் வகுப்பு தேர்ச்சி , படைவீரர் தொழில்நுட்ப நர்சிங் உதவியாளர், சிப்பாய் பர்மா மற்றும் அக்னி வீர் பொதுப்பணி (பெண்கள் காவல் படைப்பிரிவு) ஆகிய பணிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தின் மூலமாக மட்டுமே 12.03.2025 முதல் விண்ணப்பம் செய்யப்பட வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 10.04.2025 ஆகும். எழுத்து தேர்வுக்கான ஆளறிசான்று ஆன்லைன் மூலமாக விநியோகிக்கப்படும். விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.inஎன்ற இணையதளத்தின் மூலமாகவும், பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் ஆளறி சான்றினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் தேவைப்படும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் உள்ள இயக்குநர், ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகத்தினை 044-25674924 என்ற தொலைபேசி எண் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இந்திய இராணுவத்தில் அக்னி வீரர் ஆள்சேர்ப்பு முறையானது முற்றிலும் ஆன்லைன் மூலமாக தானியங்கு அடிப்படையில் நடைமுறைப்படுத்த படுவதாலும், நியாயமான மற்றும் வெளிப்படை தன்மையானது என்பதாலும், விண்ணப்பதாரர்கள் எந்த ஒரு இடைத்தரகரையோ அல்லது முகவரையோ அணுகி ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. திறமைகளின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும், இடைத்தரகர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்த முகவர்களுக்கு எந்த விதமான பங்கும் இல்லை எனவும், அது போன்ற நபர்களின் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் அனைத்து விண்ணப்பதாரர்களையும் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.

 

0Shares