இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியும் இன்றைய அரசியலும்!

Loading

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது இந்திய அரசியலில் பிரிக்க முடியாத நிகழ்வாகவே இருந்து வருகிறது.முதன் முதலில் இப்தார் நோன்பு நிகழ்ச்சி என்பது இந்திய பாராளுமன்றத்தில் கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது.

அன்றைய இந்திய பிரதமர் பண்டித ஜவர்கலால் நேரு அவர்கள் காயிதே மில்லத் அவர்கள் நோன்பு திறப்பதற்கு நேரம் வந்தவுடன் பாராளுமன்றத்தில் இருந்து வெளியேறி நோன்பு திறந்தவுடன் உள்ளே வந்தார்கள்.

இதை கவனித்த அன்றைய பிரதமர் நேரு அவர்கள் எங்கே சென்று வருகிறீர்கள் என்று காயிதே மில்லத் அவர்களிடம் கேட்டார்கள் அதற்கு நோன்பு திறந்து விட்டு வருகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு இங்கேயே தொறக்கலாமே என்று நேரு அவர்கள் சொன்னார்கள்.சொன்னது மட்டுமல்லாமல் அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். அதன் பிறகு நேரு அவர்கள் முஸ்லிம் தலைவர்களை அழைத்து தனியாக நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை ஏற்படுத்தினார்கள்.

அதன்பிறகு முஸ்லிம் லீக் தலைவர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சிகளை மத நல்லிணக்க விழாவும் சமூக நல்லிணக்க விழாவும் சிறப்பாக நடத்தி வந்தார்கள்.

காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இது அரசியல் விழாவாக உருவெடுத்தது குறிப்பாக சொல்ல வேண்டுமானால் தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதிமுக கட்சிகளில் இருந்த முஸ்லிம் பிரமுகர்கள் தங்களை முன்னிலைப்படுத்துவதற்காக போட்டிப்போட்டிக் கொண்டு இப்தார் நிகழ்ச்சிகளை நடத்தினார்கள். குறைந்தது 500 லிருந்து ஆயிரம் நபர்களை அழைத்துக் கொண்டு தனக்குப் பின்னால் முஸ்லிம் பிரமுகர்கள் இருக்கிறார்கள் என்பதை காட்டிக் கொள்ள இந்த இப்தார் நிகழ்ச்சிகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

இதை நம்பிய கட்சிகள் அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இதனால் தான் அதிகமான லெட்டர் பேட் முஸ்லிம் கட்சிகள் உருவாகின.தமிழகத்தில் லெட்டர் பேட் முஸ்லிம் தலைவர்கள் ஏராளமான பேர்கள் இருக்கிறார்கள் இவர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இப்தார் நோன்பு நிகழ்ச்சி நடத்துவது மட்டுமே அவர்களின் பணியாக இருந்து வருகிறது.

லெட்டர் பேட் தலைவர்கள் போட்டி போட்டுக் கொண்டு அன்றைய முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அம்மையாரிடம் தேதியை கேட்டார்கள்.அதற்கு அம்மையார் நீங்கள் யாரும் நடத்த வேண்டாம் நானே அதிமுக சார்பில் நடத்துகிறேன் என்று அறிவித்து அப்பொழுது முதல் அதிமுக சார்பில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.

இதே போலதான் திமுகவின் சிறுபான்மை பிரிவு மூலம் இப்தார் நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.இப்போது பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் இந்த நோன்பு திறப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடத்தி வருகிறார்கள். நல்ல விஷயம் என்றால் கூட இது முழுக்க முழுக்க அரசியல் நிகழ்வாகவே சிறுபான்மையின் ஓட்டு வங்கியாகவே நடத்தி வருகிறார்கள்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சென்னையில் நடைபெறும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு முக்கால்வாசி பேர்கள் காசு கொடுத்து அழைத்து வரப்படும் நபர்கள்நேற்று சென்னை ராயப்பேட்டையில் நடிகர் விஜய் அவர்கள் நோன்பு திறப்பு நிகழ்ச்சி அவருடைய கட்சியின் சார்பாக ஏறத்தாழ 2000 நபர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். இதில் தனி விஷயம் என்னவென்றால் விஜய் அவர்கள் தொழுகையிலும் கலந்து கொண்டார்.

ஒரு காலத்தில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி என்பது இறை அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் ஏழைகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகவும் இஸ்லாத்தின் நல்ல பண்புகளை எடுத்துரைத்ததற்காகவும் நோன்பு திறக்க நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தார்கள். ஆனால் இன்றோ தமிழகத்தில் உள்ள முஸ்லிம் ஓட்டுக்களை வாங்குவதற்காகவே இந்த இப்தார் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.இதனால் யாருக்கும் எந்த பிரயோஜனமும் இல்லை.

0Shares