பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைக்க வேண்டும்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி அவர்கள், சாமானிய பொதுமக்களுக்கு அரசால் இலவசமாக வழங்கப்பட்டுள்ள ஒப்படை நிலங்களை பராதீனம் செய்ய 30 ஆண்டுகள் என்கிற ஒப்படை நிபந்தனைகளை தளர்த்தி 10 ஆண்டுகள் என குறைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களின் நலன் கருதி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
மேலும் அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் என்கின்ற பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழியினை கடைபிடித்து, நாடும் – ஏடும் – நாளும் போற்றும் வகையில், தங்களின் தூக்கத்தை துச்சமென எண்ணி, தமிழகத்தை அனைத்து துறைகளிலும் முன்னோடி மாநிலமாக மாற்றுவதற்கு அல்லும் பகலும் அயராது உழைத்து, ஏழை எளிய மக்களின் நலனில் அக்கறை கொண்டு, அவர்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி, நாளும் செயலாற்றி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எமது பெயிரா கூட்டமைப்பின் சார்பாக நன்றி பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
முத்தமிழறிஞர், செம்மொழிக் காவலர், தமிழ்வேள் டாக்டர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்த 2006 – 2011 காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் வீடற்ற மற்றும் நிலமற்ற ஏழை மக்களுக்கு நிலங்களையும், மனைகளையும் வழங்கும் வகையில், நிலம் ஒப்படை செய்யும் சிறப்புத் திட்டமானது தமிழக அரசால் 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு பொதுமக்களின் பேராதரவுடன் நில ஒப்படை திட்டம், வருவாய் நிலையாணை எண் 15 மற்றும் 21 இன் கீழ் இலவச பட்டாக்கள் மூலம் 2007 ஆம் ஆண்டு பொதுமக்கள் பெருமளவில் பயனடையும் வகையில் மாநிலம் முழுவதும் 2,12,946 ஏக்கர் பரப்பளவிலான நிலங்களை மேற்கூறிய திட்டத்தின் வாயிலாக 1,78,576 எண்ணிக்கையிலான தகுதி வாய்ந்த நிலம் மற்றும் வீடற்ற ஏழை விவசாய குடும்பங்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் குடும்பத்தினர், நலிந்த சமூகத்தினர், விவசாயம் மட்டும் வீட்டு மனைகளுக்கான நிலம் தேவைப்படும் மற்ற தகுதி வாய்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்களுக்கு, 30 ஆண்டு காலம் பராதீனம் செய்யக்கூடாது என்கின்ற ஒப்படை நிபந்தனைகள் உள்ளிட்ட 18 ஒப்படை நிபந்தனைகள் அடிப்படையில் நிலங்களும் மனைகளும் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டது.
மேலும் இத்திட்டத்தின் கீழ் நிலங்களைப் பெற்ற பயனாளிகள் பெரும்பாலானோர் இதனைக் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாதவர்களாக உள்ளனர். ஒப்படை நிபந்தனைகள் தொடர்பாக வழங்கிய விதிகளில் குறிப்பிட்டுள்ள நான்காவது ஷரத்தின் படி, ஒப்படை நிலங்கள் 30 ஆண்டுகளுக்குள் விற்பனை செய்யவோ அல்லது பராதீனம் செய்யவும் கூடாது. மேலும் 30 ஆண்டுகளுக்கு பிறகு விற்பனை செய்யவும் அல்லது பராதீனம் செய்யவும் விரும்பும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அல்லது கோட்டாட்சியரிடம் முன் அனுமதியினை பெறப்பட வேண்டும் என்கின்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
மேற்கூறிய நிபந்தனைகள் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாத ஏழை விவசாய பாமர மக்கள் பெரும்பாலானோர் தங்கள் பொருளாதார அத்தியாவசிய தேவைகளுக்காக வருவாய்த் துறையால் மேற்கண்ட ஒப்படை நிலங்களுக்கு வழங்கப்பட்ட கணினி பட்டாவின் அடிப்படையில் தங்களது நிலங்களையும், மனைகளையும் விற்பனை செய்துள்ளனர்.
இந்நிலையில் நில ஒப்படை நிர்வாக ஆணையமானது நில ஒப்படை ஒப்பந்த நிபந்தனைகளை மீறி விற்பனை செய்யப்பட்ட நிலங்களுக்கான ஒதுக்கீட்டினை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர். இதன் காரணமாக நிலங்களை விற்ற ஏழை விவசாய மக்களும் அந்த நிலங்களை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் வாங்கிய பொதுமக்களும் தற்பொழுது பெரும் அவதிக்குள்ளாகி, மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக தமிழக அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட நில ஒப்படை சிறப்பு திட்டம் பலவற்றில் நிபந்தனை காலம் 10 ஆண்டுகள் 12 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
ஆகவே பெருமதிப்பிற்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை விவசாய மக்களின் நலனை கவனத்தில் கொண்டு, ஒப்படை நிலங்கள் விற்பனை அல்லது பராதீனம் செய்ய மேற்கண்ட நில ஒப்படை சிறப்பு திட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள 30 ஆண்டுகள் என நிர்ணயித்துள்ள நிபந்தனை காலத்தை (பொதுமக்களின் அவசியம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு அவர்கள் விற்பனை செய்யும் பொருட்டு) 10 ஆண்டுகளாக மாற்றி அமைத்தும், மேலும் ஒப்படை நிபந்தனையின் நான்காவது ஷரத்தை மீறியதற்காக வருவாய்த் துறையால் ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவினை மறு ஆய்வு செய்து மீண்டும் அவர்களுக்கான நில ஒப்படையை உறுதி செய்தும், ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் தாங்கள் உரிய வழிவகை செய்ய வேண்டும் என பொது மக்களின் நலன் கருதி பெயிரா கூட்டமைப்பின் தலைவர் டாக்டர் ஹென்றி தமிழ்நாடு முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.