பா.ஜ.க.வினர் திடீர் சாலைமறியல்: போலீசாருடன் வாக்குவாதம்..பரபரப்பு!
கடலூர்:
மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகளை கைது செய்யக்கோரி பா.ஜ.க. வினர் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் காட்டுமன்னார் கோவிலில் பரபரப்பு நிலவியது.
வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக மத்திய அரசை கண்டித்து கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பிரதமர் மோடியின் உருவப்படத்தை எரித்ததாக கூறப்படுகிறது. இதற்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று பா.ஜ.க.வினர் வலியுறுத்தினர்.
இதனை தொடர்ந்து காட்டுமன்னார் கோவில் போலீசார் மனிதநேய மக்கள் கட்சியினர் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி காட்டுமன்னார் கோவில் பஸ் நிலையம் அருகே பா.ஜ.க.வினர் மாவட்ட தலைவர் தமிழழகன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், பா.ஜ.க.வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.மேலும் இதை கேள்விபட்டதும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பாஜகவினர் , மனிதநேய கட்சியினர் அனைவரையும் கைது செய்தால்தான் போராட்டத்தை கைவிடுவோம் என்று கூறினர்.இந்த நிலையில் பா.ஜ.க.வினர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை.இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட 76 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் காட்டுமன்னார் கோவிலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.