காசி தமிழ் சங்கமம்: வேற்றுமையில் ஒற்றுமையின் கொண்டாட்டம்

Loading

காசி தமிழ் சங்கமம்: வேற்றுமையில் ஒற்றுமையின் கொண்டாட்டம்

-டாக்டர் எல். முருகன்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை,
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை
இணையமைச்சர்

காசி தமிழ் சங்கமம் 2025 இன்று தொடங்குகிறது. இந்தியாவின் வேற்றமையில் ஒற்றுமை என்பதற்கு மேலும் ஒரு சான்றாக இது விளங்குகிறது. 2025 பிப்ரவரி 15 முதல் 24 வரை நடைபெறவுள்ள இந்த தனித்துவம் வாய்ந்த கலாச்சார விழா, நாட்டின் மிகத் தொன்மையான இரண்டு ஆன்மீக வளம் கொண்ட பகுதிகளான காசியையும், தமிழ்நாட்டையும் ஒன்றிணைக்கிறது. நிலப்பரப்பைக் கடந்து ஆழ்ந்த நாகரீகப் பிணைப்பை  வளர்க்கிறது.

2022-ம் ஆண்டு பிரதமர் திரு நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப்பட்ட   காசி தமிழ் சங்கமம் இந்த ஆண்டு 3-வது கலாச்சார நிகழ்வாக நடைபெறுகிறது. சுதந்திரத்தின் அமிர்தப் பெருவிழாவின் ஒரு பகுதியாக மத்திய அரசால் தொடங்கப்பட்ட இந்த முன்முயற்சி, ஒரே இந்தியா உன்னத இந்தியா என்ற உணர்வைக் கொண்டுள்ளது. காசி தமிழ் சங்கமம் 3.0 தமிழ்நாட்டின் உயிரோட்டமான வளமான பாரம்பரியம், வாரணாசியின் காலத்தால் அழியாத மரபுகள் ஆகியவற்றை வலுப்படுத்துகிறது.

இந்தியாவின் மிகவும் மதிக்கத்தக்க முனிவரான மகரிஷி அகத்தியரை இந்த 3-வது ஆண்டு நிகழ்வு நினைவுகூரும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர்  திரு தர்மேந்திர பிரதான் அறிவித்தார். மகரிஷி அகத்தியரின் ஞானம் தமிழ் மொழி, இலக்கியம் ஆகியவற்றுக்கு அடித்தளம் அமைத்திருப்பதோடு மாண்புகளையும், அறிவுப் பாரம்பரியத்தையும் பகிர்ந்து வழங்கியுள்ளது.

அயோத்தியில், ஸ்ரீ ராமபிரானின் பிராணப்பிரதிஷ்டை செய்த பின், நடைபெறும் முதலாவது சங்கமம் என்பது மகா கும்பமேளாவுடன் இணைந்தது என்பதும் இந்த ஆண்டு காசி தமிழ் சங்கமம் தனி முக்கியத்துவம் பெறுகிறது. இந்த சங்கமத்திற்கு தமிழ்நாட்டிலிருந்து ஆயிரம் பிரதிநிதிகளை அழைத்துவர அரசு திட்டமிட்டுள்ளது. பல்வேறு மத்தியப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 200 தமிழ் வம்சாவளி மாணவர்களும் இந்த நிகழ்வில் இணைய உள்ளனர். இளைஞர்கள் பங்கேற்பதற்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.  இதில் பங்கேற்போர் நடன நிகழ்வுகள், இசை, காசியையும் தமிழ்நாட்டையும் சேர்ந்த அழகிய கலைக் கண்காட்சி ஆகியவற்றைக் கண்டுகளிப்பார்கள்.

ஆதி சங்கராச்சாரியார் முதல் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வரை, தமிழ் கலாச்சாரத் தடங்கள் காசியில் ஆழப்பதிந்து நீடித்து வருகின்றன. தமிழ்நாட்டின் மகத்தான இலக்கிய ஆளுமைகளில் ஒருவரான மகாகவி பாரதியாரின் இல்லம் அமைந்துள்ள காசியின் அனுமன் படித்துறை புனித யாத்திரை தலமாக உள்ளது. இதே அனுமன் படித்துறையில் 17-ம் நூற்றாண்டில் குமரகுருபர தேசிகர், குமாரசாமி மடத்தை நிறுவியது காசியுடன் தமிழர்களின் பிணைப்பை வெளிப்படுத்துகிறது. 200 ஆண்டுகளுக்கும் மேலாக காசி விஸ்வநாதர் ஆலயத்தில் ஸ்ரீ காசி நாட்டுக்கோட்டை நகரத்தார் சத்திரம்  பலவகையான வசதிகளை செய்து தருகிறது.

தமிழ் கலாச்சாரத்தின் மீது பிரதமர் திரு நரேந்திர மோடி, ஒப்புமை இல்லாத அர்ப்பணிப்பை கொண்டுள்ளார்.  சிங்கப்பூரில் திருவள்ளுவர், கலாச்சார மையத்தை  அமைத்ததன் மூலம்  தமிழர்களின் வரலாற்றுப்  பாதுகாப்பிலும், கௌரவிப்பிலும் அவரது உறுதிப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். ஜகார்த்தா முருகன் கோவில் மகா கும்பாபிஷேகத்தில் அவரது ஈடுபாடு இதனை மேலும் உறுதி செய்கிறது.

2023-ம் ஆண்டு வாரணாசியில் காசி தமிழ் ச ங்கமத்தைத் தொடங்கிய போது கன்னியாகுமரி – வாரணாசி தமிழ் சங்கம ரயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கியதோடு திருக்குறள், மணிமேகலை மற்றும் பிற செவ்வியல் இலக்கியப் படைப்புகளின் பிரெய்லி மொழியாக்கத்தையும் வெளியிட்டார். மேலும்  குஜராத்தி மொழியில் திருக்குறளை வெளியிட்டதோடு தென்மேற்கு பசிபிக் நாடுகளின்  மக்களுக்கு  நெருக்கமாக இந்திய சிந்தனையையும் கலாச்சாரத்தையும் கொண்டு செல்லும் வகையில், பப்புவா நியூகினியாவின் மொழியான  டாக் பிசினிலும்  திருக்குறளை வெளியிட்டார். பிரதமரின் இத்தகைய முன்முயற்சிகள் தமிழ்நாட்டுடன் அவருக்குள்ள ஆழ்ந்த  பிணைப்பையும்  அதன் வளமான கலாச்சாரத்தை பாதுகாத்து மேம்படுத்துவதற்கான இந்தியாவின்  பரந்த உறுதிப்பாட்டையும் எடுத்துக்காட்டுகின்றன.

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ் நமது தேசத்தின் வரலாற்றில் அனைத்து மொழி, அனைத்து பாரம்பரியம், அனைத்து சமூகம் ஆகியவற்றுக்கு உரிய அங்கீகாரம் அளிப்பதை உறுதி செய்து அனைவரையும் உள்ளடக்கிய கலாச்சாரப் பாதையில், இந்தியா தொடர்ந்து நடைபோடுகிறது. காசி தமிழ் சங்கமம் 2025-ஐ நாம் கொண்டாடும் நிலையில், நமது பன்முகத்தன்மை, போற்றுதலுக்கு உரிய பொக்கிஷமாக உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

காசி – தமிழ்நாடு இடையேயான ஒற்றுமை பாரதத்தின் ஒற்றுமையாகும். இதனை இன்று மட்டுமல்ல எப்போதும் கொண்டாடுவோம்.

0Shares