ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட கர்ப்பிணி பெண்..மேல் சிகிச்சைக்கு அனுமதி!
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ரெயிலில் இருந்து தள்ளிவிடப்பட்டகர்ப்பிணி பெண்ணிற்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திருப்பூர் வழியாக பெங்களூரு செல்லும் ரெயிலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பயணம் செய்த கர்ப்பிணி பெண்ணை வாலிபர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிவிட்ட கொடூர சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்தது.இதையடுத்து கை, கால் உடைந்த நிலையில் அந்த கர்ப்பிணி மீட்கப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணை நேற்று பரிசோதனை செய்தபோது, அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசுவின் இதயத்துடிப்பு நின்றுவிட்டது தெரிய வந்தது.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆஸ்பத்திரிக்கு வந்த முதல் நாள் கர்ப்பிணி பெண்ணை ஸ்கேன் செய்தபோது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்துள்ளது. இந்தநிலையில் நேற்று மதியம் 12 மணி அளவில் மீண்டும் ஸ்கேன் செய்தபோதுதான் சிசு இறந்துவிட்டது தெரியவந்தது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணும், அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சியோடு சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
முன்னதாக நேற்று முன்தினம் இரவு வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அந்த கர்ப்பிணி பெண்ணை மாநில மகளிர் ஆணையத் தலைவர் குமாரி சந்தித்து ஆறுதல் கூறினார்.இதேபோல நேற்று காலை சென்னை ரெயில்வே கூடுதல் பொது மேலாளர், சென்னை ரெயில்வே மருத்துவ அலுவலர்கள் அந்த பெண்ணை நேரில் சந்தித்து நலம் விசாரித்து கருணைத்தொகையாக அறிவிக்கப்பட்டிருந்த ரூ.50 ஆயிரத்தை வழங்கினர்.
இந்தநிலையில் அந்த பெண்ணுக்கு அரசு தரப்பில் நிவாரணம் கிடைக்க பரிந்துரை செய்யப்படும் என்று மாவட்ட கலெக்டர் சுப்புலெட்சுமி தெரிவித்தார்.இந்த நிலையில், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பெண்ணிற்கு உயர்சிகிச்சை தேவைப்பட்டதால் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.