தமிழகமுதலமைச்சருக்கு பொதுமக்கள் நலன் கருதி பெயிரா தலைவர் கடிதம்
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஆ.ஹென்றி, தமிழ்நாடு முதலமைச்சருக்கு பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களின் நலன் கருதி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.மேலும் அவர் குறிப்பிட்டு எழுதியுள்ள கடிதத்தில்,
அனுமதியற்ற பட்டா வீட்டுமனை பிரிவு
தமிழகம் முழுவதும் கடந்த 20.10.2016 வரை அனுமதியற்ற பட்டா வீட்டு மனைகளை தாராளமாக விற்பனை செய்வதற்கு அரசு அனுமதித்திருந்தது.
இதன் அடிப்படையில் புதிய வீட்டுமனை பிரிவுகளில் சாலைகளை அமைப்பதற்கு 20.10.2016 வரை எந்த வரம்பும் அரசு தரப்பில் விதிக்கப்படவில்லை.
அணுகு சாலைகள் – புழக்க சாலைகள்.
மேலும் தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளிலும் ஏற்கனவே அனுமதியற்ற பட்டா வீட்டுமனைகள் அமையப்பெற்று, இதில் அணுகு சாலைகள் 12 அடி, 15 அடி, 16 அடி 18 அடி 20 அடி என தற்போது நிலையில் அணுகு சாலைகள் புழக்கத்தில் உள்ளது.
மனை வரன்முறை சட்டம்.
இப்படிபட்ட அனுமதியற்ற வீட்டுமனைகளையும், மனைப் பிரிவுகளையும் வரன்முறைப்படுத்தி அனுமதி பெற்று கொள்ளும் வகையில், தமிழ்நாடு அரசு ஒரு புதிய கொள்கையை கடந்த 2017 ஆம் ஆண்டு வகுத்து, அதற்கென சிறப்பு சட்டம் ஒன்றை இயற்றி, மனை வரன்முறை சட்டம் அரசாணை எண். 78 மற்றும் 172 ஆக இரு அரசாணைகளை வெளியிட்டன.
மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குறைந்தபட்சம் சாலைகளின் அளவு-;
இந்த அரசாணையிலும் மனைகளையும், வீட்டுமனை பிரிவுகளையும், மனை வரன்முறை சட்டத்தின் கீழ் விண்ணப்பித்து அனுமதி பெறுவதற்கு (Guidelines for regularization) பிரிவு 7. உட்பிரிவு (d) இல் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் குறைந்தபட்சம் 4.8 மீட்டர் அதாவது 16 அடி அணுகு சாலை இருக்க வேண்டும் எனவும்,
பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில் குறைந்தபட்சம் சாலைகளின் அளவு-;
பேரூராட்சி மற்றும் கிராமப்புறங்களில் 3.6 மீட்டர் அணுகு சாலை அதாவது 12 அடி இருக்க வேண்டும் எனவும் விதிகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் இதுவரை தோராயமாக 36,000 வீட்டுமனை பிரிவுகளுக்கு நகர் ஊரமைப்பு துறையால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அணுகு சாலைக்கான புதிய விதிகள்.
ஆனால் அதன் பிறகு கடந்த 2019 இல் வகுக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டட விதிகள் 2019 (TNCDBR-2019) இல் புதிய வீட்டுமனை பிரிவுகளை அமைப்பதற்கான அணுகு சாலை குறைந்தபட்சம் 7 மீட்டர் அதாவது 23 அடி அணுகு சாலை இருக்க வேண்டும் என விதி வகுக்கப்பட்டுள்ளது.
முரண்பாடான சாலை விதிகள்.
முரண்பாடாக உள்ள இந்த அணுகு சாலையின் அளவினை மேலே குறிப்பிடப்பட்டுள்ள அரசாணை எண் 78/2017 இல் குறிப்பிட்டுள்ளபடி மாற்றியமைத்து எளிமைப்படுத்திட வேண்டும் என்கிற எமது அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் கோரிக்கையை அரசு ஏற்று, தற்போது பகுதியாக தீர்வினை ஏற்படுத்தும் வகையில் அரசாணை எண் 58/2024 ஆக வெளியிட்டுள்ளது,
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளுக்கு குறைந்தபட்சம் 7.0 மீட்டர் அணுகு சாலை.
இதில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் நகரங்களை ஒட்டியுள்ள ஒருசில புறநகர் ஊராட்சிகளில் புதிய வீட்டுமனை பிரிவுக்கு அனுமதி பெற அணுகு சாலை அளவு குறைந்தபட்சம் 7.0 மீட்டர் எனவும்,
பேரூராட்சிகளுக்கு குறைந்தபட்சம் 6.5 மீட்டர் அணுகு சாலை
பேரூராட்சிகளில் அணுகு சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.5 மீட்டர் எனவும்,
கிராம ஊராட்சிகளுக்கு குறைந்த பட்சம் 6.0 மீட்டர் அணுகு சாலை.
கிராம ஊராட்சிகளில் அணுகு சாலையின் அளவு குறைந்தபட்சம் 6.0 மீட்டர் எனவும் இருக்க வேண்டும் என தளர்வளித்து பகுதி தீர்வினை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே உள்ள அணுகு சாலைகள்.
அதேபோன்று தமிழகம் முழுவதும் மேற்கண்ட அரசாணை எண் 78 ல் குறிப்பிட்டுள்ளபடி மனை வரன்முறை சட்டத்தின் கீழ் அனுமதி பெறப்பட்டுள்ள வீட்டு மனை பிரிவின் 12 அடி, 15 அடி, 16 அடி, 18 அடி மற்றும் 20 அடி உள்ள சாலைகளின் வழியாக சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும்,
பழமையான நகரங்களில் புழக்க சாலைகள்.
அதேபோன்று நகர்ப்புறங்களில் காலம் காலமாக பயன்பாட்டில் அமைந்துள்ள 16 அடி, 18 அடி மற்றும் 20 அடி சாலைகள் வழியாகவும் சென்று, பின்புறம் அமைந்துள்ள பெரும் நிலங்களையும்,
தொலைநோக்குப் பார்வையோடு அரசாணை.
புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்யும் பொருட்டும், அந்தந்த நகரங்களில் வசிக்கும் பொதுமக்களின் வீட்டுமனை கனவுகள் நினைவாகும் வகையில் மேற்கண்ட அரசாணை எண் 78 ல் குறிப்பிட்டுள்ளபடி தொலைநோக்குப் பார்வையோடு மேற்கண்ட அரசாணையில் (G.O NO 58/2024) திருத்தம் கொண்டு வந்து,புதிதாக ஏற்படுத்தும் வீட்டுமனை பிரிவுக்கு தமிழ்நாடு ஒருங்கிணைந்த அபிவிருத்தி மற்றும் கட்டிட விதிகளின்படி அனுமதித்து நடைமுறைப்படுத்தி உதவிட வேண்டுமெனவும்,
மதுரை நீதிமன்றம் வழிகாட்டி தீர்ப்பு
அதுவரை ஏற்கனவே தூத்துக்குடி மாநகராட்சியில் இப்படி பழமையாக அமைந்துள்ள 18 அடி சாலையின் வழியே சென்று, அதன் பின்புறம் அமைந்துள்ள நிலங்களை, புதிய விதிகளின்படி அபிவிருத்தி செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என மதுரை நீதிமன்றம் சமீபத்தில் பிறப்பித்துள்ள உத்தரவுபடி,
அணுகு சாலை குறித்து புதிய விதிகள் தேவை.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மேற்கண்ட அணுகு சாலை பிரச்சனையை தங்களின் கூடுதல் கவனத்தில் கொண்டு, பொதுமக்கள் மற்றும் அபிவிருத்தியாளர்களின் நலன் கருதி, தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் மூலம் மேற்கண்ட பிரச்சனையை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, “மேல் முறையீடு மனு” பெற்று அதன் அடிப்படையில் தீர்வு காண தாங்கள் வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து தமிழக முதல்வருக்கு பெயிரா தலைவர் டாக்டர் ஹென்றி கடிதம் எழுதியுள்ளார்.