நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்
நாட்டுக்காக பாடுபடும் தேசியப் பாதுகாப்பு படையினரின் நலனைப் பாதுகாக்க வேண்டும்;
அவர்களுக்கான குடியிருப்புகளை மத்திய உள்துறை இணையமைச்சர் திரு அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்து பேச்சு
சென்னை வண்டலூருக்கு அருகிலுள்ள, தேசியப் பாதுகாப்பு படையின் (என் எஸ் ஜி) சிறப்பு தீவிரவாத எதிர்த்தாக்குதல் படை (எஸ் சி ஜி) 27வது படைப்பிரிவினருக்கு புதிதாக ரூ. 30.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 64 வீடுகள் கொண்ட குடியிருப்பை இன்று மத்திய உள்துறை இணையமைச்சர் திரு. அஜய் குமார் மிஷ்ரா திறந்துவைத்தார்.
இந்தக் குடியிருப்புகள் நவீன மோனோலித்திக் எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைவாகவும் திடமாகவும் செங்கற்களை பயன்படுத்தாமலேயே கட்டப்பட்டுள்ளன.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி, லட்சத்தீவு மற்றும் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளை உள்ளடக்கிய தென் பகுதியின் தலைமையிடம் சென்னையில் அமைந்துள்ள இந்த முகாம் ஆகும். கருப்பு பூனைகள் (பிளாக் கேட்ஸ்) என்று அழைக்கப்படும் தேசிய பாதுகாப்பு படையினர் உலகளவில் எவ்வித பிழையுமின்றி துல்லியமாக தீவிரவாத எதிர் தாக்குதலுக்கு பெயற்பெற்ற படைப்பிரிவினர்.
அமைச்சர் தேசியப் பாதுகாப்பு படைவீரர்களிடையே பேசுகையில் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பில் கடந்த 39 ஆண்டுகளாக சிறப்பாக செயலாற்றி வரும் தேசிய பாதுகாப்பு படையினருக்கு இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார். இன்று உலகளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் வேளையிலும் புதுப்புது தொழில்நுட்பங்கள் மூலம் அவற்றை முறியடிக்க அனைத்து வழிகளிலும் எப்போதும் தயாராக இருக்கும் வீரர்களின் பணியை வெகுவாகப் பாராட்டினார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தபிறகு நமது பாதுகாப்பு படை வீரர்களுக்கான நலனில் மிகுந்த அக்கறை கொண்டு அவர்களுக்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு அதிகரித்துள்ளது என்றும் நாட்டுக்காக பாடுபடும் வீரர்களின் குடும்பங்களின் நலனை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார். நமது வீரர்கள் நாட்டின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் இன்றி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார்.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மத்திய ஆயுதப்படை வீரர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் நாட்டிலுள்ள 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி தரமான மருத்துவ சிகிச்சை பெற முடியுமென்றார். பிரதமரின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பு படை வீரர்களின் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது என்று கூறினார். ராணுவ வீரர்கள் பணியின்போது உயிரிழக்க நேரிட்டால் அவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகையைப் போலவே தேசியப் பாதுகாப்பு படை மற்றும் மத்திய ஆயுதக்காவல் படை வீரர்களும் தீவிரவாத எதிர்ப்பு தாக்குதல்களில் ஈடுபடும் பொழுது ஊனம் அல்லது உயிரிழப்பு நேரிட்டால் அவர்களுக்கும் நிவாரணம் வழங்க பாரத் வீர் தளம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
பின்னர் சிறப்பு தீவிரவாத எதிர் தாக்குதல் படையினரின் ஆயுதங்களின் கண்காட்சியை பார்வையிட்ட அமைச்சர் ட்ரோன்கள் உள்பட ரிமோட் மூலம் இயக்கப்படும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் வாகனங்களின் செயல்பாடுகள் மற்றும் வெடி மருந்துகளை கண்டுபிடிக்கவும் அவற்றை செயலிழக்கச் செய்யும் பணியில் ஈடுபடும் வீரர்கள் உடுத்தும் உடையின் குளிர்சாதன வசதி மற்றும் காற்றோட்ட வசதிகள் உள்பட நவீன ஆயுதங்களின் துல்லியமான செயல்பாடுகளையும் கேட்டறிந்தார். மேலும் அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடியின் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழ்க்கை முறையை பின்பற்ற வலியுறுத்தும் வகையில் வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நிகழ்ச்சியில் தேசியப் பாதுகாப்பு படையின் தலைமை இயக்குனர் திரு எம் ஏ கணபதி மற்றும் உயரதிகாரிகளும் கலந்துகொண்டனர்.