இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 எனும் உன்னதமான திட்டத்தின் மூலமாக சிகிச்சை பெற்று பயனடைந்து வரும் ஹரிகிருஷ்ணன் என்ற 1,50,000-வது பயனாளியை திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பூக்கொத்து வழங்கி, நலம் விசாரித்து பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 2021 டிசம்பர் திங்கள் 18-ம் தேதி இந்தியாவிலேயே ஒரு முன் மாதிரியான இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 எனும் உன்னதமான திட்டத்தை தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார்.அந்த திட்டமானது இன்றைக்கு தமிழ்நாட்டில் ஒன்றரை இலட்சமாவது பயனாளியை இங்கு பார்த்திருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இதுவரை விபத்துக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1,50,107 என்கின்ற அளவில் பதிவாகியிருக்கிறது. இந்த விபத்துகளில் சிக்கிய 1,50,000-க்கும் மேற்பட்டவர்களின் உயிர்கள் இன்றைக்கு காப்பற்றப்பட்டிருக்கிறது.
இந்த திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு கடந்த இந்த ஒன்னேகால் ஆண்டில் டிசம்பர் 18-ம் தேதி தொடங்கியிருந்தாலும், கடந்த 15 மாத காலத்தில் மட்டும் அரசின் சார்பில் இதற்காக செலவிடப்பட்ட தொகை 132 கோடியே 52 இலட்சத்து 81 ஆயிரத்து 250 ரூபாயாகும். நூற்றி முப்பத்தி இரண்டரை கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்திற்காக செலவழித்து இன்றைக்கு ஒன்றரை இலட்சம் உயிர்களை பாதுகாத்திருக்கிறார்கள். இந்த ஒன்றரை இலட்சமாவது பயனாளியை பனிமலர் மருத்துவமனையில் பார்த்தது என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நலம்பெற, நலமுடன் திரும்ப அனைத்து மருத்துவர்களிடத்தில் எடுத்து சொல்லப்பட்டுள்ளது.
இங்கு இந்த பனிமலர் மருத்துவமனை பொறுத்தவரை முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டமும் மிகச் சிறப்பான செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. 2021 பிப்ரவரி 1 முதல் இந்த திட்டம் இந்த மருத்துவமனையில் செயல்பாட்டில் இருந்து கொண்டிருக்கிறது. 2021 பிப்ரவரிக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த திட்டத்தை பொறுத்தவரை இந்த மருத்துவமனையில் 15 சிகிச்சை முறைகளுடன் மிகச் சிறப்பான செயல்பாட்டில் இருக்கிறது. அந்த வகையில், மாண்புமிகு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழும், 237 பயனாளிகள் ஒரு கோடியே 43 இலட்சம் ரூபாய் செலவில் பாதுகாக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, 2021 டிசம்பர் மாதம் துவங்கப்பட்டு தற்போது 1,50,000-க்கும் மேற்பட்டோர் பயனடைந்து வரும் இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48 எனும் உன்னதமான திட்டம் சிறப்புடன் செயல்பட அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை பூவிருந்தவல்லி, பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் பொன்னாடை அணிவித்து பாராட்டினார்.
இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் பி.செந்தில்குமார்,தமிழ்நாடு சுகாதார திட்ட இயக்குனர் உமா,மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, சுகாதாரத்துறை இணை இயக்குநர் (பொ) பி.சேகர், துணை இயக்குநர்கள் செந்தில் குமார், ஜவகர்லால், பனிமலர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் சக்தி குமார், சரண்யா சக்தி குமார், பனிமலர் மருத்துவக் கல்லூரி முதல்வர் இளம்பரிதி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.