தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள்

Loading

தமிழகம் முழுவதும்1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் பருவ காலங்களில் வழக்கமாக வைரஸ் காய்ச்சல் பரவும். ஆனால் தற்போது ‘எச்.3 என்2’ என்ற புதிய வகை வைரஸ் நாடு முழுவதும் வேகமாக பரவி காய்ச்சலை உருவாக்குகிறது. இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இடைவிடாத இருமல், தொண்டை வலி, உடல் வலிகளாலும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.இந்த காய்ச்சல் பரவுவது பற்றியும், கட்டுப்படுத்துவது பற்றியும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களையும் உஷார்படுத்தியது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தொற்று அதிக அளவில் பரவி வருவது பொது சுகாதாரத்துறை ஆய்வில் தெரியவந்தது.இந்த வைரஸ் காய்ச்சல் சிறுவர்களையும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த முதியவர்களையும் அதிகம் பாதிக்கிறது.  இந்த காய்ச்சல் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் வேகமாக பரவி வருவது தெரிய வந்திருக்கிறது. மருத்துவ ரீதியாக இந்த காய்ச்சலின் தாக்கத்தை பொறுத்து 3 வகையாக பிரித்து உள்ளார்கள். ஏ-டைப் லேசான காய்ச்சல், பி-டைப் மிதமான காய்சல், சி-டைப் தீவிரமான காய்ச்சல். இதில் சி-டைப் காய்ச்சல் வயதானவர்களிடம் தான் காணப்படுகிறது. இவர்களுக்கு சுவாச பிரச்சினையையும் ஏற்படுத்துவதால் கட்டாயம் ஆஸ்பத்திரிகளில் தங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலை ஏற்படும். சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் இருமல், உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி ஒன்றிரண்டு வாரங்கள் வரை சிரமப்பட வைப்பதால் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பாதிப்பு இருப்பவர்களை கண்டறிந்து உரிய சிகிச்சைகள் வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.இதையடுத்து தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 1000 இடங்களில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்தார். அதன்படி நேற்று காலை 8 மணிக்கு அனைத்து இடங்களிலும் முகாம்கள் தொடங்கியது. சைதாப்பேட்டை ரசாக் தெருவில் காய்ச்சல் சிறப்பு முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். முகாம்களுக்கு வரும் பொதுமக்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு காய்ச்சல் அறிகுறி இருக்கிறதா? என்பதை மருத்துவ குழுவினர் உறுதி செய்தனர்.காய்ச்சல் இருந்தவர்களுக்கு தேவையான மாத்திரைகள் வழங்கப்பட்டன.  மற்றவர்களிடம் இந்த காய்ச்சல் வந்தால் அறிகுறிகள் எப்படி இருக்கும்? எப்படி முன்எச்சரிக்கையாக இருப்பது என்பது பற்றி ஆலோசனைகள் வழங்கப்பட்டன. சாதாரணமாக ஜூரம், தலைவலி என்றாலே மாத்திரையை தேடக்கூடாது. உடலில் நீர்சத்து குறைவதால் கூட காய்ச்சல் வரும். பயணம் செய்யும் போதோ, அதிகமாக தண்ணீர் குடிக்காமல் இருக்கும் போதோ நீர்சத்து குறைந்து உடல் சூடாகி, சோர்வு ஏற்பட்டு காய்ச்சல் போல்தான் இருக்கும். இதற்கும் நாமே மாத்திரை எடுத்துக் கொண்டால் பாதிக்கும். பொதுவாக எல்லா மாத்திரைகளுமே கல்லீரல் மற்றும் கிட்னி வழியாக கிரகித்து மலம் மற்றும் சிறுநீர் வழியாக வெளியேறும். அப்படி இருக்கும்போது கல்லீரலுக்கும், கிட்னிக்கும் நாமே ஆபத்தை தேடி கொடுத்தது போல் ஆகிவிடும்.பொதுவாக காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு இருந்தால் முதலில் நீர்சத்து நிறைந்த ஏதாவது உணவை எடுத்துக் கொண்டு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். இவ்வாறு செய்யும்போது உடல் புத்துணர்ச்சி பெறும். இதில் சரியாகாவிட்டால் மாத்திரையை தேடலாம். உடலில் கிருமித்தொற்று ஏற்பட்டாலே முதலில் காய்ச்சல் தான் வரும். எனவே காய்ச்சல் எதனால் வந்திருக்கிறது என்பதை அறிந்து மருந்து எடுத்துக் கொள்வது நல்லது என்று பொதுமக்களுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. காய்ச்சல் முகாமை தொடங்கி வைத்த பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:-தமிழகம் முழுவதும் ரைவஸ் காய்ச்சல் பரவலை தடுக்க 1000 இடங்களில்   காய்ச்சல் முகாம் சிறப்பாக நடைபெற்றது. அரசு மருத்துவமனைகளில் தேவையான அளவிற்கு மருந்து, மாத்திரைகள் கையிருப்பு உள்ளன. அதனால் பதட்டம் கொள்ள தேவையில்லை. காய்ச்சல், தலைவலி, தொண்டை வலி, உடல்வலி உள்ளவர்கள் 3, 4 நாட்கள் ஓய்வு எடுத்துக்கொண்டால் குணமாகும். இந்த பாதிப்புடன் வெளியே வந்தால் இருமல் வரும்போதும், தும்மல் வரும்போதும் அதில் இருந்து வெளியே வரும் நீர்துவாளைகள் மூலம் மற்றவர்களுக்கு பரவக் கூடும். அதனால் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது கொரோனா பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் கொரோனா மிதமான பாதிப்பு கூடி வருகிறது. ஒமைக்ரான் வகை கொரோனா பாதிப்புதான்.தமிழகத்தில் கொரோனா தொற்று கூடினாலும் பாதிப்பு பெரிதாக இல்லை. ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா பாதிப்பு 2ஆக குறைந்தது. தற்போது 20, 25 ஆக உயர்ந்து இருக்கிறது. மிதமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய வைரஸ்தான். அதனால் பதட்டம் அடைய தேவையில்லை. தொடர் கண்காணிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தனிப்பட்ட ஒவ்வொருவரின் பாதுகாப்பு கருதி முகக்கவசம் அணிந்து வெளியில் சென்றால் நல்லது. காய்ச்சல் பாதிப்பு அதிகமாக இருந்தால் 380 நடமாடும் மருத்துவ வாகனம் பயன்படுத்தப்படும். தேவை ஏற்பட்டால் முகாம்கள் 1500ஆக அதிகரிக்கப்படும். இந்த வைரஸ் சமூக தொற்றாக மாறாது.
இவ்வாறு அவர் கூறினார்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *