காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரை: ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை

Loading

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை யாத்திரையை மேற்கொள்ளும் போது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஒரு சில இடங்களில் நடைபயணத்தைத் தவிர்த்து வாகனத்தில் செல்லுமாறு அவருக்கு மத்திய புலனாய்வு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் எச்சரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ராகுல் காந்தியின் பயணப் பாதையின் பாதுகாப்பு அம்சங்கள், அவர் இரவில் தங்குமிடத்தின் பாதுகாப்பு அம்சங்கள் ஆராயப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.52 வயது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார். தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா. மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா என பல மாநிலங்களிலும் அவர் யாத்திரை மேற்கொண்ட நிலையில் விரைவில் ஜம்மு காஷ்மீரில் யாத்திரை மேற்கொள்கிறார்.நாளை (19-ந் தேதி) ராகுல் காந்தி லக்கன்பூரில் நுழைகிறார். அங்கு இரவு தங்கிவிட்டு அடுத்தநாள் காலை கத்துவா செல்கிறார். பின்னர் இரவில் சட்வாலில் தங்குகிறார். ஜனவரி 21 ஆம் தேதி காலை ஹிராநகரில் இருந்து டுக்கர் ஹவேலி செல்கிறார். ஜனவரி 22ல் விஜய்பூர் முதல் சத்வாரி வரை பயணிக்கிறார்.வரும் ஜனவரி 25 ஆம் தேதி ராகுல் காந்தி காஷ்மீரின் பனிஹால் பகுதியில் தேசியக் கொடி ஏற்றுகிறார் பின்னர் அனந்தநாக் மாவட்டம் வழியாக பயணித்து 2 நாட்களில் ஸ்ரீநகரை அடைகிறார். ராகுலின் ஸ்ரீநகர் பயணத்தின்போது அவருடன் மிகவும் குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று பாதுகாப்பு அமைப்புகள் அறிவுறுத்தியுள்ளதாகத் தெரிகிறது.சில பாதைகள் பதற்றம் நிறைந்தவையாக அறியப்படுவதால் அங்கெல்லாம் ராகுல் காந்தி நடைபயணத்தை தவிர்த்து காரில் செல்லலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி ராகுல் காந்தியின் தலைமையில் ஸ்ரீநகரில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் நடைபெறுகிறது. அதில் கலந்து கொண்டு இந்திய ஒற்றுமை யாத்திரையை ராகுல் காந்தி நிறைவு செய்கிறார்.இந்தக் கூட்டத்தில் ஆம் ஆத்மி, சந்திரசேகர ராவின் பாரத் ராஷ்ட்ர சமிதி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், பிஜு ஜனதா தலம், அகாலி தலம், அதிமுக, ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இந்தச் சூழலில் தான் ராகுலின் பாதுகாப்பு குறித்து அறிவுரைகள் வெளியாகியுள்ளன.Z+ பாதுகாப்பு:ராகுல் காந்திக்கு இப்போது Z+ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவரைச் சுற்றி 24 மணி நேரம் 8 முதல் 9 கமாண்டோக்கள் பாதுகாப்பில் இருப்பார்கள். கடந்த மாதம் ராகுல் காந்தி தனது யாத்திரையின் வழியில் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரியிருந்தார். அதற்குப் பதிலளித்த மத்திய அரசு ராகுல் காந்தியே கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 100 முறைக்கு மேல் பாதுகாப்பு வளையத்தை மீறியிருக்கிறார் என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இப்போது காஷ்மீர் யாத்திரையில் பாதுகாப்பு குறித்து ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *