சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் ஒன்றிய அளவிலான துளிர் அறிவியல் வினாடி வினா போட்டி
சிவகங்கை மாவட்டத்தில் கல்லல் ஒன்றிய அளவில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக துளிர் ஜந்தர் மந்தர் அறிவியல் வினாடி வினா போட்டியானது கல்லல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள வட்டார வள மையத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் ராம்மோகன் தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் பாஸ்கல் பயிலோன், சேவியர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்க கல்லல் கிளைச் செயலாளர் பிரபு வரவேற்புரை ஆற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆரோக்கியசாமி நோக்க உரை ஆற்றினார்.
வட்டார வள மைய பொறுப்பு மேற்பார்வையாளர் சங்கீதா, கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அழகப்பன் வாழ்த்துரை வழங்கினார்கள். அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலைப் பள்ளிகள், அரசு மேல்நிலைப் பள்ளிகள் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் திரளாக வினாடி வினா போட்டியில் கலந்து கொண்டார்கள்.
தமிழ் வழி மற்றும் ஆங்கில வழியில் இளநிலை, உயர்நிலை, மேல்நிலை என மூன்று பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. தமிழ் வழியில் இளநிலை பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கல்லல் அரசு உயர்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
உயர்நிலை பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும் கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். மேல்நிலைப் பிரிவில் கல்லல் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கல்லல் முருகப்பா மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
ஆங்கில வழியில் இளநிலை பிரிவில் கல்லல் அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி முதலிடத்தையும், என் வைரவன் பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர். உயர்நிலை பிரிவில் கல்லல் சாந்தி ராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கண்டரமாணிக்கம் சேது ஐராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.
மேல்நிலைப் பிரிவில் கல்லல் சாந்தி ராணி பதின்ம மேல்நிலைப்பள்ளி முதலிடத்தை பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. மாணவர்களை வழிநடத்திய ஆசிரிய பெருமக்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கிளை பொருளாளர் கலாவதி நன்றி கூறினார்.