திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சி : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் துவக்கி வைத்தார் :

Loading

திருவள்ளூர் : திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம், திரூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உலக உணவு தினம் அக்டோபர் 16-ஆம் நாள் கடைபிடிக்கப்படுவதை தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக நடைபெறும் உயர்தர உள்ளுர் இரகங்களை பிரபலப்படுத்துவதற்கான மரபு சார் பன்முகத்தன்மை கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ துவக்கி வைத்து, பார்வையிட்டு, ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
உலக உணவு நாள் ஆண்டுதோறும் அக்டோபர் 16-ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. பசியால் யாரும் வாடக்கூடாது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் உலக உணவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆரோக்கியம் தரும் உணவினை உற்பத்தி செய்வது முதல், உணவு பற்றாக்குறை இருக்கும் வேளையில், உணவினை பாதுகாப்பாக சேமித்து வைப்பது வரையிலான விழிப்புணர்வினையும், கைவிடப்பட்ட பாரம்பரியம் மிக்க பாதுகாப்பான சேமிப்பு முறைகள் குறித்தும் கவனம் செலுத்தும் வகையில் உலக உணவு தினத்தை முன்னிட்டு மரபுசார் பன்;முகத்தன்மை காண்காட்சி என்ற நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நம் நாட்டின் பாரம்பரியமான விதைகளிலிருந்து நாம் விலகி பல்வேறு விதைகளுக்கு சென்றதனால் தற்போது இருக்கக்கூடிய பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொண்டு வருகிறோம்.திருவள்ளூர் மாவட்டத்தில் நன்றாக வளரக்கூடிய ஒரு விதையின் தன்மை என்பது வேறு இடத்தில் இருப்பதற்கான சாம்தியம் இல்லாமல் இருக்கலாம். ஏனென்றால் ஆங்காங்கு இருக்கக்கூடிய அந்தந்த மண்ணின் தன்மை மற்றும் தட்பவெப்பநிலை  சூழ்நிலைக்கேற்ப உணவு பொருட்களின் தன்மையும் மாறுபடும். அதுமட்டுமின்றி, அவ்வப்பொழுது வரக்கூடிய வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களை எதிர்கொள்வதற்கு ஒரு நாட்டின் பாரம்பரிய விதைகளால் தான் முடியும். அப்படியிருக்கும்போது நாம் அதையெல்லாம் முழுமையாக மாற்றி வேறொரு நாட்டிலிருந்து வரக்கூடிய விதைகளை நாம் பயிரிடுகின்றபோது பாதிப்பு ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகள் மீண்டும், மீண்டும் பெரிய சவால்களாக இருந்து கொண்டேயிருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு மரபுசார் பன்முகத்தன்மை காண்காட்சி என்பது அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து மதுரை வேளாண்மை கல்லூரியில் நடைபெற்ற உலக உணவு தின விழாவில் 23 பாரம்பரிய நெல் ரகங்களை கொண்ட விதை பண்ணைகளை பராமரித்ததற்காக வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  “பாரம்பரிய இயற்கை காவலர்” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட பொன்னேரி வட்டம், சின்னக்காவனம் கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் என்ற விவசாயி மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
மேலும், இக்கண்காட்சியில் ஆட்சியர் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு பாரம்பரிய உணவு வகைகளை சாப்பிட்டு, செய்முறை விளக்கம் குறித்து கண்காட்சியில் இடம்பெற்றிருந்த பல்வேறு துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
விழாவில், வேளாண்மை இணை இயக்குனர் (பொ) எல்.சுரேஷ், திருவள்ளூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெயசீலி ஜெயபாலன், துணைத்தலைவர் பர்க்கத்துல்லாகான், வேளாண்மை அறிவியல் நிலையம் பேராசிரியர் மற்றும் திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) பெ.சாந்தி, வேளாண்மை வேளாண் பொறியியல் மற்றும் தோட்டக்கலைத் துறை அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *