பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் தலைமையில் சீல் வைப்பு…. போலீசார் குவிப்பால் பரபரப்பு
கன்னியாகுமரி மாவட்டம் :- நாடு முழுவதும் 15 மாநிலங்களில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்புடன் தொடர்புடைய 93 இடங்களில் அமலாக்கத்துறை, தேசிய புலனாய்வு முகமை, மாநில போலீசார் ஆகியோர் கடந்த 22ஆம் தேதி சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நிர்வாகிகள் 106 பேர் மத்திய விசாரணை அமைப்புகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் நிர்வாகி ஷபீக் பயேத் என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குறிப்புகளின்படி, பிரதமர் மோடி மீது தாக்குதல் நடத்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா திட்டமிட்டதாகவும், இதற்காக பயிற்சி முகாம் ஒன்றை அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்ததாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
மேலும், அமைப்பு சேகரித்த 120 கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களையும் கைப்பற்றியுள்ள அமலாக்கத்துறை, நாடு முழுவதும் கலவரத்தை ஏற்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்தது.இந்த நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பு மட்டுமின்றி, அதன் துணை அமைப்புகள் மற்றும் அதற்கு உதவும் அமைப்புகளுக்கும் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அந்த அமைப்பின் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டு வருகிறது
.இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இடலாக்குடி பகுதியில் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்த பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கு தாசில்தார் சேகர் மற்றும் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் நவீன் தலைமையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது இதேபோன்று மேல சூரங்குடி பகுதியில் அமைந்துள்ள பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அலுவலகத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.
இதனை அடுத்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டிருந்தனர். மேலும் அங்கு என்ன என்ன இருந்தது என்பதை போலீசார் குறிப்பு எடுத்து சென்றனர் .பதற்றம் நிலவாமல் இருக்க அப்பகுதி முழுவதும் போலீசார் குவிக்கபட்டிருந்தனர்..