போதை பொருள் விற்பனையை தடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்.
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதி கிருஷ்ணா நகர் மெயின் ரோட்டில் உள்ள செல்வ லட்சுமி வரவேற்பு கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4வது மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய மாநில செயலாளர் சலீம் சாரம் எஸ்.ஆர். சுப்பிரமணியம் உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் என்று சட்டமன்றத்தில் கடந்த ஆட்சியில் அறிவிக்கப்பட்டும் இதுவரை எவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க பாலாஜி தியேட்டர் அருகில் இருந்து மறைமலை அடிகள் சாலை வரை உப்பனாற்றின் மேல்பாலம் அமைத்து போக்குவரத்திற்கு பயன்படுத்த திட்டம் போட்டு பல ஆண்டுகள் ஆன பின்பும் முழுமை யடையாமல் பாதியில் கட்டி அரைகுறையாக உள்ளது. இதனால் மழைக்காலங்களில் வாய்க்கால் நிரம்பி பக்கத்து பகுதிகளில் பாதிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.
போக்குவரத்து நிறைந்துள்ள இச்சூழலில் பாலத்தை உடனடியாக கட்டி முடித்திட வேண்டும். பாலத்தை ஜீவா நகர் பகுதி வரை விரிவுப் படுத்திட வேண்டுமெனவும் புதுச்சேரி அரசை கேட்டுக்கொள்கிறோம் என்றார். மேலும் புதுச்சேரி மாநிலம் முழுவதிலும் குறிப்பாக பள்ளி கல்லூரிகளில் கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுகின்றன.
இதனால் பள்ளி மாணவர்கள் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி குற்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். கஞ்சா போன்ற போதை பொருட்கள் விற்கப்படுவதை புதுச்சேரி அரசும் காவல்துறையும் இதன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநாட்டில் பேசினார்.
மேலும் பேசிய அவர் காமராஜர் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிப்பிள்ளை தோட்டம் கருணா ஜோதி நகர் அணைக்கரை மேடு பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீடுகளுக்கான இணைப்புகள் வழங்காமல் காலம் கடத்தி வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன எனவே இந்த பகுதிகளில் உடனடியாக இணைப்பு வழங்கிட புதுச்சேரி அரசு பொதுப்பணித் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார்.
லெனின் நகர் வாஞ்சிநாத நகர் பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். குப்பை தொட்டிகளை அகற்றிவிட்டு தினசரி சுகாதார ஊழியர்கள் வீடுகள் தோறும் குப்பைகளை சேகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். மேலும் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.