தமிழக சமத்துவ கட்டிட தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மே தின விழா
சேலம் மாவட்டம், தலைவாசல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களில், தமிழக சமத்வ கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் உழைப்பாளர் தினமான மே 1ஆம் நாள் அன்று அச்சங்கத்தின் கொடி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. சுமார் 15-க்கும் மேற்பட்ட கிளைகளை தலைவாசல், வீரகனூர், லத்துவாடி, கெங்கவல்லி, நடுவலூர், நத்தக்கரை, சிறுவாச்சூர், மணிவிழுந்தான் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அச் சங்கத்தின் கிளைகள் திறப்பு விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் அச்சங்கத்தின் நிறுவனரும் மாநில பொதுச் செயலாளருமான MM.சுப்ரமணியன் அவர்கள் கலந்து கொண்டு கிளைகளை திறந்துவைத்தார்.
பிறகு அவர் பேசியதாவது; தமிழக சமத்வ கட்டிட தொழிலாளர்கள் சங்கத்தின் 20ம் ஆண்டு துவக்க விழா மற்றும் சங்க உறுப்பினர்கள் நியமன விழா சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இச்சங்கத்தின் மூலம் ஏறத்தாழ 16 மாவட்டங்களில் உள்ள கட்டிட தொழிலாளர்களுக்கு அவர்களின் குறைகளை கண்டறிந்து சங்கத்தின் மூலம் தேவையான உதவிகளை செய்து வருகிறது. குறிப்பாக கட்டிட தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்பு போன்றவற்றினால் அவர்களது குடும்பத்தினர் வெகுவாக பாதிக்கப்படும் பட்சத்தில் அவர்களுக்கு தேவையான உதவிகளை தொடர்ந்து இச்சங்கம் செய்து வருவதாகவும், மேலும் கட்டிட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் தமிழக அரசு கவனத்தில் கொண்டு விபத்து ஏற்படும் தொழிலாளர்களுக்கும், உயிரிழப்பு ஏற்படும் தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கும் போதிய அளவு நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இவ்விழாவில் ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் நூற்றுக்கணக்கானோர் தங்களை சங்கத்தின் அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டனர். சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. இவ்விழாவில் மாநில தலைவர் சேகர், மாநில துணை பொதுசெயலாளர் சதீஷ்குமார், மாநில அமைப்புச் செயலாளர் V.T. செல்வம், மாநில துணைத் தலைவர் ராஜா, மாநில மகளிர் அணி தலைவி சிவகாமி, சிறப்பு அழைப்பாளர்களாக ராமலிங்கம், பழனிவேல், நடராஜன், ஜெகதீசன், ராம்கி, முத்துவேல், செல்வகுமார், விருத்தாம்பாள் உள்ளிட்ட சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.