மே 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
மே 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடரும் என மதுரையில் ரேஷன் கடை பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் ஆசிரியதேவன் தெரிவித்தார். இதுகுறித்து பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் அரிசி தரமற்றதாக இருந்தது எனக்கூறி 20 விற்பனையாளயர்களை காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் அவர்கள் தற்காலிக பணி நீக்கம் செய்து கூட்டுறவு துறை வரலாற்றில் ஒரு பிழை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நியாயவிலைக் கடைக்கு வரும் அரசியின் தரம் பற்றி உறுதி செய்திட விற்பனையாளர்கள், செயலாளர்கள் ஏதும் செய்ய இயலாத நிலையில் அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளது பெரும் கண்டனத்திற்குரியது. நியாயவிலை கடைகளுக்கு தரமான அரிசியை தயார் செய்து வழங்க வேண்டியது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் முதல் முக்கிய கடமை. கடமையை தவறாக செய்த அவர்களையும், அரிசி தரமானது, மக்கள் உணவு பயன்பாட்டிற்கு உகந்தது என சான்று அளிக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தரக்கட்டுப்பாடு ஆய்வாளர், அவர்களை கண்காணித்து தரமான அரிசியை கடைகளுக்கு அனுப்பி வைக்கும் ஒரே முக்கிய பணி செய்ய வேண்டிய கடமையும் பொறுப்பும் உள்ள, வருவாய் துறை அலுவலர்கள், கூட்டுறவு துறை அலுவலர்கள் இவர்களை விடுத்து விற்பனையாளர்கள் செயலாளர்கள் தண்டிக்கப்படுவது இயற்கை நியதிக்கும், சட்டத்திற்கும் எதிரானதாகும். காஞ்சிபுரம் மண்டல இணைப்பதிவாளர் செயலை கண்டித்து மாநில சங்கம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்துள்ளோம். மேலும் பணியிடை நீக்கம் செய்தவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். இல்லையென்றால் வரும் 4ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டம் தொடரும் என தெரிவித்தார். உடன் அருவகம், முரளி, உபயதுல்லா, மூர்த்தி, குருமலைச்சாமி, ரத்தினகுமார், கதிர்வேல் பாண்டியன், அழகு சுந்தரம், சங்கரநாராயணன்,வசந்தி, சேகர் உட்பட மதுரை மேற்கு, கிழக்கு, திருப்பரங்குன்றம் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.