கோவை பாரதியார் பல்கலைக்கழக மாணவிகள் விடுதிக்குள் புகுந்த வாலிபர் கைது
கோவை:
கோவை மருதமலை மெயின் ரோட்டில் அமைந்துள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தின் பெண்கள் தங்கும் விடுதி பகுதியில் சந்தேக நபர் ஒருவரின் நடமாட்டம் இருப்பதாகவும், இதனால் அந்த விடுதியில் தங்குவதற்கு அச்சமாக இருப்பதாக கூறியும் கடந்த மார்ச் மாதம் 31-ந்தேதியன்று பாரதியார் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள் பல்கலைக்கழக நுழைவு வாயிலின் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பல்கலைக்கழக துணைவேந்தர் காளிராஜ் பேசும்போது, சந்தேக நபரின் நடமாட்டம் குறித்து காவல்துறையினர் மூலம் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும், மாணவிகளின் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் என்று உறுதி அளித்தார். அதன் அடிப்படையில் மாணவிகள் கலைந்து சென்றனர்.
இதனை தொடர்ந்து கடந்த 10-ந் தேதி அதிகாலை பெண்கள் விடுதி பகுதியில் மீண்டும் சந்தேக நபரின் நடமாட்டம் இருந்ததாகவும், மாணவிகள் தங்கியிருக்கும் ஒரு அறையின் ஜன்னல் வழியாக லேப்-டாப்பை எடுக்க முயற்சித்ததாகவும் மாணவிகள் பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் தெரிவித்தனர்.
இதை அடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளிக்க ப்பட்டது. இதை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு கோவை மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு உத்திரவின் பேரில், பேரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு சந்தேக நபர் பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் நேற்று காலை கல்வீரம்பாளையம், டான்சா நகர் பகுதிகளில் தனிப்படையினர் கண்காணித்த போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் சுற்றித் திரிந்த கல்வீரம்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து என்பவரின் மகன் சுரேந்தர் (வயது 19) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் சுரேந்தர்தான்பாரதியார் பல்கலைக்கழக விடுதி பகுதியில் சுவர் ஏறி குதித்ததும், மடிக்கணினியை திருட முயன்றதாகம் ஒப்புக்கொண்டான். மேலும் சுரேந்தர் அடையாளம் தெரியாமல் தப்பிக்க, பெண்களைப் போல, அங்கு மாணவிகள் துவைத்து காயப்போட்டிருக்கும் சுடிதார், நைட்டி போன்ற உடைகளை அணிந்து உலா வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதை அடுத்து போலீசார் சுரேந்தர் மீது இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர். சுரேந்தர் கைது செய்யப்பட்டதால் விடுதி மாணவிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.