தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டும் – விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் நம்பிக்கை.
தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதல் மாநிலமாக சாதனை படைக்க முதல்வர் ஸ்டாலின் துபை பயணம் உதவும் என்று விஐடி வேந்தர் ஜி.விஸ்வநாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற முதல்வர் மு. க. ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் விஐடி வேந்தர் ஜி. விசுவநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றியதாவது, கடந்த 10 மாதமாக திராவிட கொள்கைகளை கடைபிடித்து சிறப்பாக ஆட்சி நடத்தி வரும் முதல்வருக்கு வாழ்த்து கூற வந்துள்ளேன். நான் அவரை சிறு வயது முதலே பார்த்து வருகிறேன், நானும் முரசொலி செல்வம் ஒன்றாக லயோலா கல்லூரியில் படித்தவர்கள், கலைஞரிடம் என்னை அறிமுகப்படுத்தியது முரசொலி செல்வம் தான். கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நட்பக இருந்து வந்தோம், முதல்வர் ஸ்டாலின் சாதாரணமாக கட்சிக்கு வந்தவர் அல்ல, அவர் மிசா சட்டத்தையே பார்த்தவர். பல்வேறு போராட்டங்களை கடந்து முதல்வராக உயர்ந்துள்ளார். சாதாரணமாக இந்த பதவிக்கு அவர் வந்து விடவில்லை. முதல்வர் ஸ்டாலின் மிசா காலகட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் தாக்கப்பட்டு பல்வேறு இன்னல்களுக்கு பிறகு வெளியே வந்தவர். கட்சியில் படிப்படியாக வளர்ந்து பல்வேறு நிலைகளை கடந்து முதல்வராக பொறுப்பேற்று இன்று நல்ல ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். நான் அறுபது ஆண்டுகளாக அரசியலை கவனித்துக் கொண்டு வருகிறேன், என்னுடைய இருபத்தி ஏழாவது வயதில் அறிஞர் அண்ணா வந்தவாசி நாடாளுமன்ற வேட்பாளராக என்னை அறிவித்தார். அப்போது ஆற்காடு சட்டமன்ற வேட்பாளராக இங்கே இருக்கும் கலாநிதியின் தந்தை ஆற்காடு வீராசாமி அவர்களை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக அண்ணா அறிவித்தார். ஆற்காடு வீராசாமி சுறுசுறுப்பானவர் அவரை சட்டமன்றத்திற்கு அனுப்புகிறேன் என்னைப் பற்றி அண்ணா குறிப்பிடும்போது விசுவநாதன் எம்.ஏ.பி.எல் படித்தவர் என்னைவிட அதிகமாக படித்தவர் என அறிஞர் அண்ணா கூறினார். நான் நினைத்துப் பார்க்கிறேன் எந்த காலத்தில் இப்படி ஒரு தலைவர்கள் இருக்கிறார்கள், உலகத்தில் இளைஞர்கள் கட்சி ஆரம்பித்து ஆட்சியை பிடித்த ஒரே கட்சி திமுக தான். திமுக 1949ல் ஆரம்பிக்கும் போது அண்ணாவிற்கு 40 வயது, நாவலர் நெடுஞ்செழியனுக்கு 29 வயது, அன்பழகனுக்கு 27 வயது, கலைஞருக்கு 25 வயது , ஒரே வருடத்தில் 2035 பொதுக்கூட்டங்களை நடத்தி இருக்கிறார்கள், கொள்கைகளை மக்களிடம் எடுத்துச் சென்று கட்சியை வளர்த்தார்கள்.
நான் ஏழாம் வகுப்பு படிக்கும்போது பெரியாரின் பேச்சை கேட்பேன், சோவியத் யூனியன் தலைவர் ஜோசப் ஸ்டாலின் இறந்த மாதத்தில் தான் முதல்வர் ஸ்டாலின் பிறந்தார் அவர் நினைவாகவே தனது மகனுக்கு ஸ்டாலின் என்று கலைஞர் பெயர் சூட்டினார் . நாடு வளம் பெற மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்படவேண்டும். மராட்டியம் மற்றும் கர்நாடகா மாநிலம் இச்சட்டத்தை நிறைவேற்றியுள்ளது, தமிழ்நாட்டிலும் இச்சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும். தமிழ்நாடு ஏழை மாநிலம் அல்ல என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகிறார், அவர் கூறியது போல நாம் ஏழை மாநிலம் அல்ல. நாம் இந்திய அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கிறோம், முதலிடத்தில் மராட்டியம் இருக்கிறது.
தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக உயர வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார் . இதற்கு தனி நபர் வருமானம் உயர வேண்டும். தனிநபர் வருமானம்1960 ஆண்டுகளில் தென் கொரியா 160 டாலராக, ஜப்பான் 460 டாலராக, சீனா80 டாலராக இருந்தது, தற்போது தென் கொரியா 30,000, ஜப்பான் 40,000 சீனா11,000 டாலராக தனிநபர் வருமானம் உள்ள நாடாக வளர்ந்துள்ளன. இந்த வளர்ச்சியை நாமும் பெற கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். உலகில் 25 முதல் 30 நாடுகளில் உயர்கல்வி வரை இலவச கல்வி கிடைக்கிறது, இதனை செயல்படுத்த இலவசங்களை குறைக்க வேண்டும், நிர்வாக சீர்திருத்தம் வேண்டும், இலவச திட்டங்கள் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் அளிக்கப்பட வேண்டும், மக்களும் அரசுக்கு உதவிட வேண்டும்,
முதல்வர் ஸ்டாலின் மிகச் சிறந்த பண்பாளர், அண்ணாவிடம் இருந்த பண்பு ஸ்டாலினுக்கும் உண்டு ஒன்றே குலம் கோட்பாட்டை உடையவர். மக்களாட்சி நிலைநிறுத்த வேண்டும். இன்று நாட்டின் முதல் மாநிலமாக மராட்டியம் உள்ளது இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது இந்த நிலையை மாற்ற நமது முதல்வர் தற்போது அந்நிய அன்னிய முதலீடுகளை ஈர்க்க துபாய் சென்றுள்ளார். நமது நாடு பொருளாதார வளர்ச்சி அடைய 1991இல் பிரதமராக இருந்த நரசிம்மராவும் நிதி அமைச்சராக இருந்த மன்மோகன்சிங்கும் இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை அதிகரித்தனர். அதேபோல தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சியை முதல்வர் ஸ்டாலினும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் தமிழகத்தின் பொருளாதாரத்தை ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற்றுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ,திரைப்பட நடிகர் ஜோ. மல்லூரி, நடிகர் சங்கத்தலைவர் நாசர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர் .