9,831 காவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

Loading

சென்னை, மார்ச் 9-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, 9,831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகளை தமிழக முதல்வர மு.க. ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, 9,831 இரண்டாம் நிலை காவலர்கள், 1,200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (மார்ச் 8) தலைமைச் செயலகத்தில், பணிநியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 5 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.

காவல்துறை என்பது குற்றங்களைத் தடுக்கும் துறையாகவும், தண்டனை பெற்றுத்தரும் துறையாகவும் மட்டும் அல்லாமல், குற்றங்கள் நடக்காத சூழ்நிலையை உருவாக்கும் துறையாகச் செயல்பட வேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலின்படி மாநிலத்தின், அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றி வரும் காவல் துறையின் பணிகள் சிறக்க பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
7.5 கோடி மக்கள் வாழும் தமிழகத்தில் 1,13,000 காவல்துறை அலுவலர்கள் மற்றும் ஆளிநர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சிறப்பாக பேணிப் பாதுகாத்திட காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை ஆகிய துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை தமிழக அரசு விரைந்து நிரப்பி வருகிறது.

அந்த வகையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 9831 இரண்டாம் நிலை காவலர்கள், 1200 தீயணைப்பு காவலர்கள் மற்றும் 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை காவலர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 9831 இரண்டாம் நிலை காவலர்களில், 6,140 நபர்கள் சிறப்பு காவல் படையிலும், 3,691 நபர்கள் ஆயுதப்படையிலும் தேர்வாகியுள்ளனர். இதில் 2,948 பெண் காவலர்கள் மற்றும் 3 திருநங்கைகள் ஆகியோரும் அடங்குவர். மேலும், 119 சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையில் தேர்வாகியுள்ளவர்களில் 12 பெண் சிறைக்காவலர்களும் அடங்குவர்.
காவல்துறையின் காலிப் பணியிடங்கள் நிரப்படுவதால், துறையின் புலனாய்வுத் திறன் மற்றும் செயல்திறன் மேலும் சிறப்பாக மேம்படும்.

இந்த நிகழ்ச்சியில், சட்டத் துறை அமைச்சர் எஸ். ரகுபதி, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநர் சுனில் குமார் சிங், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் பிராஜ் கிஷோர் ரவி, காவல்துறை கூடுதல் இயக்குநர் (நிர்வாகம்) கே. சங்கர், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

0Shares

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *