கன்னியாகுமரி மாவட்டத்தில் வருகை தந்த முதலமைச்சர் மழை வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளில் சீரமைக்கும் பணிகளை நேரில் ஆய்வு
கன்னியாகுமரி, மார்ச் 9-
கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு வருகை தந்து வடகிழக்கு பருவ மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட சாலைகள் குளங்கள் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட சாலைகள் குளங்கள் மற்றும் நீர் நிலப் பகுதிகளை சீரமைக்க திட்டமதிப்பீடு அனுப்பிவைக்கப்பட்ட வகையில் நாகர்கோவில் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு சாலைகளை சீரமைக்க 26 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் முடிவுற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல வில்லு குறியிலிருந்து பேயன்குழி வழியாகச் செல்லும் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு விவசாய விளை நிலங்களில் தண்ணீர் புகுந்து சேதமடைந்தது இதனை தமிழ்நாடு மாநில பேரிடர் நிதியிலிருந்து 60 லட்சம் மதிப்பில் மூன்று ராட்சச இரும்புக் குழாய்கள் வழியாக தண்ணீர் கொண்டு செல்வதற்கான பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பணியும் முடிவடையும் தருணத்தில் உள்ளது. இந்த பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மாண்புமிகு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று முந்தினம் மாலை 3 மணி அளவில் கன்னியாகுமரி மாவட்டம் வந்து அடைந்தார். முதலமைச்சருக்கு குமரி மாவட்ட எல்லையான காவல்கிணறு விலக்கு பகுதியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மற்றும் குமரி திமுக (கிழக்கு) பொறுப்பாளர் மகேஷ் அவர்கள் தலைமையில் தி .மு. க.கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
அதன் பின் நாகர்கோவில் அரசுவிருந்தினர் மாளிகையில் மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அவர்கள் முதலமைச்சருக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பளித்தார்.
அதன் பின் முதலமைச்சர் நாகர்கோவில் டெரிக் சந்திப்பில் உள்ள தார் சாலைகளை ஆய்வு செய்தார். தொடச்சியாக பேயன்குழி நடைபெறும் கால்வாய் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். அதன் பின் குமாரபுரம் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் பொது தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் திருமதி. ஆஷா அஜித் ஆகியோர் உடன் இருந்தனர். கன்னியாகுமரி மாவட்ட கண்காணிப்பளார் திரு. பத்ரி நாராயணன் தலைமையில் 1200 க்கும் மேற்பட்ட போலீசார் முதமைச்சர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கன்னியாகுமரிக்கு வருகை தந்த முதலமைச்சர் அவர்களுக்கு செல்லும் வழி எல்லாம் கட்சி தொண்டர்களும், பொது மக்களும் மிகுந்த வரவேற்பு அளித்தனர் .