இன்று முதல் இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்க்குமாம்
வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் வரும் 6-ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது..
சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.. இது அடுத்து வரும் 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.. அடுத்து வரும் 48 மணி நேரத்தில் இலங்கையின் கிழக்கு கடல் பகுதி வழியாக வட தமிழக கடலோர பகுதியை நோக்கி நகரக்கூடும்..
இதன் காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.. நாளை, கடலோர தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.. நாளை மறுதினம் கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும்..
தென் மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும்.. எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்.. சென்னையை பொறுத்தவரை இன்றும் நாளையும் மிதமான மழையும் பெய்யக்கூடும்..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..