ஆளுநருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திமுக ஆவேசம்
நீட் விலக்கிற்காக குடியரசு தலைவர் உரையிடையே கோஷம்
டெல்லி: நீட் விலக்கு மசோதாவை காலதாமதமாக்குவதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திமுக, காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
நீட் விவகாரம்: நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கம்!
ஆண்டுதோறும் மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. அது போல் இந்த ஆண்டும் பட்ஜெட் நாளை தாக்கலாகிறது. இதற்காக இன்றைய தினம் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.
தேர்தல்கள் வரும் போகும்.. ஆனால் பட்ஜெட்தான் ஒட்டுமொத்த ஆண்டுக்கான வரைப்படம்.. பிரதமர் நரேந்திர மோடி
இந்த கூட்டத் தொடர் இன்று முதல் பிப்ரவரி 11 ஆம் தேதி வரையும் பின்பு மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையும் இரு கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் கூட்டத் தொடர் தொடங்கியது.
75 ஆவது குடியரசு தினம்
குடியரசுத் தலைவர் தனது உரையில் 75 ஆவது சுதந்திர தின விழா இந்த ஆண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில் நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த அத்தனை போர் வீரர்களுக்கும் எனது வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசி வருகிறார். மேலும் திருவள்ளுவரின் திருக்குறளை மேற்கோள் காட்டி பேசி வருகிறார்.
திமுக எம்பிக்கள் போராட்டம்
அப்போது நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காலதாமதமாக்குவதாக கூறி திமுக, காங்கிரஸ் கட்சி முழக்கமிட்டு போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தப்படுவதால் ஏழை எளிய மக்களின் மருத்துவராகும் கனவு கானல் நீராகிவிடுவதாக தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
முடிவு எடுக்கப்படவில்லை
இது தொடர்பாக கடந்த அதிமுக ஆட்சியில் சட்டசபையில் நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் அப்போது ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அந்த தீர்மானம் குறித்து முன்னாள் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எந்தவித முடிவையும் எடுக்காமல் இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
நீட் தேர்வு மசோதா
இதையடுத்து திமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன் மீது தமிழகத்திற்கு புதிதாக வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி எந்த வித நடவடிக்கையையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக திமுக குற்றம்சாட்டி வருகிறது. தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்க மாநில ஆளுநருககு மத்திய அரசு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக எம்பிக்கள் குழு சந்தித்து கடிதம் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
ஆளுநர் உரை
நீட் தேர்வு விலக்கு மசோதாவின் மீது முடிவெடுப்பதில் காலம் தாழ்த்தி வந்த நிலையில் குடியரசு தின உரையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, நீட்டுக்கு ஆதரவாக குறிப்பிட்டிருந்தார். அதாவது நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 1 சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனவே அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை உயர்த்துங்கள் என தனது உரையில் ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்திருந்தார்.
முரசொலியில் பதிலடி
இதற்கு தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் எதிர்வினையாற்றியிருந்தனர். இந்த நிலையில் முரசொலியில் ஆளுநர் ரவியை கண்டித்து கட்டுரை தீட்டப்பட்டிருந்தது. அதில் தமிழகத்தை பொருத்தவரை இரு மொழிக் கொள்கைதான். இதிலே ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் மாறுபட்ட கருத்தில்லை. பல பிரச்சினைகளில் எதிரும் புதிருமாக இருந்தாலும், தமிழகத்தின் சில பிரச்சினைகளில் ஒட்டுமொத்தத் தமிழகமும் ஒன்றிணைந்த நிற்கும்! அதிலே ஒன்ரு இரு மொழிக் கொள்கை. மற்றொன்று நீட் வேண்டாமென்பது! ஆளுநர் ரவி இதனை உணர்ந்து உரிய தகவலை மேலிடத்திற்கு தந்து ஒட்டுமொத்தத் தமிழகத்தின் உரிமைக் குரலுக்கு அங்கீகாரம் வாங்கித் தர முயற்சி செய்ய வேண்டும். அதனை விடுத்து இங்கே பெரியண்ணன் மனப்பான்மையோடு அரசியல் செய்ய நினைத்தால்
கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா… எனும் பழங்கதை மொழியை அவருக்கு நினைவுப்படுத்த விரும்புகிறோம். அதாவது இது நாகாலாந்து அல்ல. தமிழகம் என்பதை அவர் உணர்ந்திட வேண்டும் என அந்த முரசொலியில் குறிப்பிடப்பட்டிருந்தது.